×

சென்னை விமான நிலையத்தில் கடந்த 2 நாட்களில் வெளிநாடுகளில் இருந்து கடத்திய ரூ.2 கோடி தங்கம் பறிமுதல்: விமான நிலைய ஊழியர், பெண் உள்பட 3 பேர் கைது

சென்னை: சென்னை விமான நிலையத்தில் கடந்த 2 நாட்களில் ரூ.2 கோடி மதிப்புடைய 3.05 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு, விமான நிலைய ஊழியர், பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு விமானங்களில் தங்கம் கடத்தி வரப்படுவதாக நேற்று முன்தினம் சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள், வெளிநாட்டில் இருந்து சென்னை வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது துபாயிலிருந்து வந்த தனியார் விமானத்தில் சென்னையைச் சேர்ந்த 30 வயது ஆண் பயணி ஒருவர், துபாய்க்கு சுற்றுலா சென்றுவிட்டு சென்னை திரும்பி வந்தார். அவர் மீது சந்தேகம் ஏற்பட்டு, அவரை நிறுத்தி அவருடைய உடமைகளை சோதித்தனர். அதில் அவர் அணிந்திருந்த ஷூக்கள் வழக்கத்தை விட அதிக கனமாக இருந்தது. அதனை பிரித்துப் பார்த்தபோது, அதனுள் தங்கப்பசை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. அதில் 1.3 கிலோ தங்கப்பசை இருந்தது, அதன் சர்வதேச மதிப்பு ரூ.85 லட்சம்.

இதனையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க அதிகாரிகள், அந்த பயணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கிலிருந்து தனியார் பயணிகள் விமானம் நேற்று முன்தினம் இரவு சென்னை வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது சென்னையைச் சேர்ந்த 40 வயது பெண் பயணி ஒருவர், சுற்றுலா பயணியாக தாய்லாந்து நாட்டுக்கு சென்று விட்டு திரும்பி வந்தார்.

அவர் மீது சந்தேகம் ஏற்பட்டு, அவரது உடைமைகளை சுங்க அதிகாரிகள் சோதித்தனர். அதற்குள் 350 கிராம் எடையுடைய தங்க செயின்கள் மற்றும் வளையல்கள் இருந்தது தெரியவந்தது. அதற்கு அந்த பெண் பயணி, அவைகள் கவரிங் நகைகள் என்று கூறினார். ஆனால் சுங்க அதிகாரிகள் பரிசோதித்த போது, அது தங்க நகைகள் என்று உறுதியானது. அதன் சர்வதேச மதிப்பு ரூ.23 லட்சம். இதையடுத்து தங்க நகைகளை பறிமுதல் செய்த சுங்க அதிகாரிகள், அந்த பெண் பயணியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதன் தொடர்கதையாக நேற்று சென்னை சர்வதேச விமான நிலைய புறப்பாடு பகுதி வழியாக, விமான நிலையத்தில் உணவு விடுதி ஒன்றில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றும் மணிகண்டன் (28) என்பவர், கையில் பிளாஸ்க் ஒன்றுடன் வெளியில் வந்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாப்பு படை வீரர், மணிகண்டன் மீது சந்தேகமடைந்து அவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். மேலும் அவர் கையில் வைத்திருந்த பிளாஸ்க்கை திறந்து பார்த்ததில் அதில் தங்க கட்டிகள் இருப்பது தெரிய வந்தது.

இதைடுத்து பாதுகாப்பு அதிகாரிகள், தங்க கட்டிகளையும், மணிகண்டனையும் விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். சுங்க அதிகாரிகள் ஆய்வு செய்தபோது அதில் 1.4 கிலோ தங்க கட்டிகள் இருந்தன. அதன் சர்வதேச மதிப்பு ரூ.92 லட்சம். இதனையடுத்து தங்க கட்டிகளை பறிமுதல் செய்து மணிகண்டனை கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், துபாயிலிருந்து வந்த ஒரு பயணி, இந்த பிளாஸ்க்கை மணிகண்டனிடம் கொடுத்து விமான நிலையத்திற்கு வெளியில் வருகை பகுதியில் நிற்கும் ஒருவரிடம் கொடுக்க சொன்னதால் எடுத்து வந்ததாக கூறினார். சுங்க அதிகாரிகள் விமான நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகள் மூலம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சென்னை விமான நிலையத்தில் கடந்த 2 நாட்களில் வெளிநாடுகளில் இருந்து கடத்திய ரூ.2 கோடி தங்கம் பறிமுதல்: விமான நிலைய ஊழியர், பெண் உள்பட 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai airport ,Chennai ,Dinakaran ,
× RELATED சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு...