×

அனைத்து திட்டங்களிலும் பயன் பெற மாற்றுத்திறனாளிகள் ஆதார் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: அரசின் அனைத்து திட்டங்களிலும் பயன்பெற மாற்றுத்திறனாளிகள் தங்கள் ஆதார் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அனைத்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்களுக்கு மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் நேற்று அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து திட்டங்களிலும் பயன்பெற மாற்றுத்திறனாளிகள் தங்கள் ஆதார் எண்களை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்கள் தங்கள் மாவட்டத்தில் அனைத்து திட்டங்களிலும் பயன்பெறும் மாற்றுத்திறனாளிகளின் ஆதார் எண்களைப் பெற்று கணினிமயமாக்க வேண்டும். சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்திடம் இருந்து அனைத்து அரசு செயலாளர்களுக்கும் அனுப்பப்பட்ட நேர்முக கடிதத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து திட்டங்களிலும் மாற்றுத்திறனாளிகள் பயன்பெற தங்களின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை எண் அல்லது இணையதளத்தில் அதற்கான பதிவு எண்களை மாற்றுத்திறனாளி என்பதற்கான மருத்துவர் சான்றிதழுடன் சமர்ப்பிக்க 1.4.2023 முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகையால், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதார் எண் பெறுவது, மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை எண் பெறுவது அவசியமான ஒன்றாக கருதப்படுகிறது. எனவே, மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதார் எண் கோரி விண்ணப்பிக்கவும், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காத மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்களை பெற்று ஆவணங்களை பதிவேற்றம் செய்வதற்கும், தொடர்ந்து அவர்கள் திட்டங்களில் பயன் பெறுவதற்கும் மே மாதத்திற்குள் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் ஏற்பாடுகள் செய்ய வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post அனைத்து திட்டங்களிலும் பயன் பெற மாற்றுத்திறனாளிகள் ஆதார் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும்: தமிழக அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Govt. ,CHENNAI ,Tamil Nadu government ,Director of Disabled Welfare ,District ,Disabled Welfare Officers ,Disabled Persons Welfare Department ,
× RELATED ரேசன் கடைகளில் மே மாதத்திற்கான...