×

மறைமலைநகர் அருகே பெரும் பரபரப்பு ஒரே தண்டவாளத்தில் எதிரெதிரே வந்து நின்ற 4 மின்சார ரயில்கள்: பயணிகள் அலறியடித்து ஓட்டம்

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் – சிங்கபெருமாள்கோவில் இடையே ஒரே தண்டவாளத்தில் அடுத்தடுத்து 4 மின்சார ரயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. இந்த ரயில்கள் அனைத்தும் எதிரெதிரே மோதுவதுபோல் நெருக்கமாக நின்றதால் பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். சென்னையில் மாநகரப் பேருந்து, ஆம்னி பேருந்து வசதி இருந்தாலும் அன்றாட போக்குவரத்தில் ரயில்வே முக்கிய பங்கு வகிக்கிறது. புறநகர் ரயில்கள் மூலம் தினமும் ஆயிரக்கணக்கானோர் பல்வேறு பகுதிகளுக்கு வந்து செல்கின்றனர்.

இதில் சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு இடையில் மின்சார ரயில்கள் அதிகளவில் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை-தாம்பரம் இடையே 4 ரயில் பாதைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றில் 2 பாதைகளில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுகின்றன. மீதமுள்ள 2 பாதைகள் புறநகர் ரயில்கள் வந்து செல்ல பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் தாம்பரம்-செங்கல்பட்டு மார்க்கத்துக்கு 2 பாதைகள் மட்டுமே இருந்தன.

சமீபத்தில்தான் இந்த மார்க்கத்தில் 3வது பாதை அமைக்கப்பட்டு அது பயன்பாட்டுக்கு வந்தது. இதில் எக்ஸ்பிரஸ் ரயில்களும், புறநகர் ரயில்களும் ஒரே நேரத்தில் அதிகளவில் இயக்கப்படும்போது சிக்னல் கோளாறு போன்ற சிக்கல்கள் ஏற்படுகின்றன. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது. இதனால் சிங்கபெருமாள்கோவில் – மறைமலைநகர் இடையே திடீரென சிக்னல் கோளாறு ஏற்பட்டு, காலை 8 மணி முதல் 8.30 மணி வரை 4 மின்சார ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

இந்த ரயில்கள் மிகக்குறைந்த இடைவெளியில் ஒன்றோடு ஒன்று மோதுவதுபோல் நெருக்கமாக நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் ரயில்கள் மோதிக் கொள்ளும் அபாயம் இருப்பதாகக் கருதி, அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இந்த 4 ரயில்களும் செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை நோக்கிச் சென்ற ரயில்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே சிக்னல் கோளாறு சரி செய்யப்பட்ட பிறகு ரயில்கள் சேவை மீண்டும் தொடங்கியது.

ரயில் பாதையில் சிக்னல் கோளாறு ஏற்பட்டதை அடுத்து விரைவு ரயில்கள் தாமதமாக செல்லக் கூடாது என்பதற்காகவே ஒரே தண்டவாளத்தில் 4 ரயில்கள் நிறுத்தப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் கூறினர். வாரத்தில் முதல் நாளான திங்கள்கிழமை சிக்னல் கோளாறு ஏற்பட்டு மின்சார ரயில்கள் நிறுத்தப்பட்டதால் பல்வேறு பகுதிகளுக்கு வேலைக்குச் சென்றவர்கள் தாமதமாக செல்ல வேண்டிய நிலை உருவானது.

The post மறைமலைநகர் அருகே பெரும் பரபரப்பு ஒரே தண்டவாளத்தில் எதிரெதிரே வந்து நின்ற 4 மின்சார ரயில்கள்: பயணிகள் அலறியடித்து ஓட்டம் appeared first on Dinakaran.

Tags : Karamalainagar ,CHENNAI ,Chengalpattu District Chiramalai Nagar ,Singaperumalkovil ,City Bus ,Omni ,Kiramalainagar ,
× RELATED சென்னையில் நாளை நடைபெறும் வாக்கு...