×

அஜர்பைஜானில் இருந்து நாடு திரும்பியபோது ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் பலி: அமைச்சர் உள்ளிட்டோரும் மரணம் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் இரங்கல்

டெஹ்ரான்: அஜர்பைஜானில் இருந்து நாடு திரும்பிய போது, மலைப்பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி பலியானார். அவருடன் பயணித்த வெளியுறவு அமைச்சர் ஹுசேன் அமிரப்துல்லாஹியன் உள்ளிட்டோரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. ஈரான் அதிபர் மறைவுக்கு இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் இரங்கல் தெரிவித்துள்ளன. ஈரான், அஜர்பைஜான் எல்லைகளுக்கு இடையே பாயும் அராஸ் நதியின் குறுக்கே இரு நாடுகளும் இணைந்து கட்டிய அணை திறப்பு விழா நேற்று முன்தினம் நடந்தது.

இதில் அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியெவுடன் பங்கேற்ற ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி (63) அணையை திறந்து வைத்து பார்வையிட்டார். அதைத் தொடர்ந்து, தலைநகர் டெஹ்ரானுக்கு திரும்ப, அதிபர் ரைசி ஹெலிகாப்டர் மூலமாக தப்ரிஸ் நகருக்கு புறப்பட்டார். அவருடன் வெளியுறவு அமைச்சர் ஹுசேன் அமிரப்துல்லாஹியன் (60) உள்ளிட்ட உயர் அதிகாரிகள் ஹெலிகாப்டரில் பயணித்தனர்.

ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாணம், தப்ரிஸ் நகரின் அடர்ந்த டிஸ்மர் வனப்பகுதியின் மேல் ஹெலிகாப்டர் பறந்து கொண்டிருந்த போது மோசமான வானிலை நிலவியது. கடும் பனி மூட்டத்திற்கு மத்தியில், அதிபருடன் பயணித்த மற்ற அதிகாரிகளின் 2 ஹெலிகாப்டர்கள் பத்திரமாக தரையிறங்கின. ஆனால், அதிபர் ரைசி, வெளியுறவு அமைச்சர் உள்ளிட்டோர் பயணித்த ஹெலிகாப்டர் என்ன ஆனது என தெரியவில்லை. அது செங்குத்தான மலைப்பகுதியில் தரையிறங்க கடும் சிரமங்களை எதிர்கொண்டதாக ஈரான் அரசு செய்தி நிறுவனம் நேற்று முன்தினம் இரவு தகவல் வெளியிட்டது.

அதைத் தொடர்ந்து, அதிபர் ரைசியின் ஹெலிகாப்டரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. அதிபர் ரைசிக்காக நாட்டு மக்கள் அனைவரும் பிரார்த்திக்குமாறு ஈரான் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி காமனெயி வலியுறுத்தினார். கடுமையான பனி, ஆபத்தான மலைப்பகுதி என்பதால் தேடுதல் பணியில் கடும் சிரமம் ஏற்பட்டது. துருக்கி, அஜர்பைஜான் உள்ளிட்ட நாடுகள் ஈரானுடன் இணைந்து இரவு முழுவதும் தேடும் பணியில் உதவி செய்தன.

ஈரான்-அஜர்பைஜான் எல்லைக்கு தெற்கே சுமார் 20 கிமீ தொலைவில் செங்குத்தான மலையின் ஒருபகுதியில் தீப்பற்றி எரிவதாக, துருக்கி மீட்புக்குழு டிரோன் வீடியோ பதிவு காட்சிகளை நேற்று அதிகாலை வெளியிட்டது. அதைத் தொடர்ந்து அப்பகுதியில் மீட்புப்படையினர் விரைந்து சென்று பார்த்ததில், ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் பயணித்த அதிபர் ரைசி, வெளியுறவு அமைச்சர் ஹுசேன் அமிரப்துல்லாஹியன் உள்ளிட்ட 9 பேரும் பலியானதாக ஈரான் அரசு நேற்று காலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

விபத்து பகுதியில் இருந்து அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு தப்ரிஸ் நகருக்கு கொண்டு வரப்பட்டன. கடும் பனி மூட்டம் காரணமாக ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியிருக்கலாம் என்றாலும் விபத்துக்கான காரணத்தை ஈரான் அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.  அதிபர் ரைசி மரணத்தை தொடர்ந்து 5 நாள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக உச்ச தலைவர் காமனெயி அறிவித்துள்ளார். மசூதிகளில் கறுப்பு கொடி ஏற்றி துக்கம் அனுசரிக்கப்படுகிறது. அதிபர் ரைசி மறைவால் ஈரான் மக்கள் கடும் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.

இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் அதிபர் ரைசி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளன. வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தனது இரங்கல் செய்தியில், ‘‘அதிபர் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் அமிரப்துல்லாஹியனின் மரணச் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. கடந்த ஜனவரி மாதம் அவர்களை சந்தித்தேன். அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கிறேன். இந்த துயரமான நேரத்தில் ஈரான் மக்களுடன் இந்தியா துணை நிற்கும்’’ என்றார். சீனா நல்ல நண்பனை இழந்து விட்டதாக அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் கூறி உள்ளார்.

ரைசி மரணத்தையொட்டி ஒருநாள் துக்கம் அனுசரிப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவித்துள்ளார். அதிபர் ரைசி விபத்து தொடர்பான தகவல்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அதிபர் ரைசி ரஷ்யாவின் உண்மையான நண்பன் என ரஷ்ய வெளியுறவு அமைச்சர் ஜெர்சி லவ்ரோவ் கூறி உள்ளார். ஈரான் ஆதரவுடன் லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பு, ரைசியை தங்களின் மூத்த சகோதரன் என்றும், தங்கள் அமைப்பின் வலுவான ஆதரவாளர் என்றும் புகழஞ்சலி செலுத்தியது. காசாவின் ஹமாஸ் அமைப்பும், ஏமனின் ஹவுதி அமைப்பும் இரங்கல் தெரிவித்துள்ளன.

* இடைக்கால அதிபராக துணை அதிபர் நியமனம்
ஈரான் அரசியலமைப்பின்படி, அதிபர் இறந்தாலோ அல்லது பதவியை விட்டு வெளியேறினாலோ, அடுத்த தேர்தல் நடக்கும் வரை துணை அதிபர் இடைக்கால அதிபராக பொறுப்பேற்பார். அதன்படி, தற்போதைய துணை அதிபர் முகமது முக்பரை இடைக்கால அதிபராக உச்ச தலைவர் காமனெயி நேற்று அதிகாரப்பூர்வமாக நியமித்தார். அவரது தலைமையில் அமைச்சரவை கூடி அதிபர் ரைசி மறைவுக்கு இரங்கல் தெரிவித்தது. புதிய அதிபர் அடுத்த 50 நாட்களுக்குள் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படுவார்.

பிரதமர் மோடி இரங்கல்
பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ‘‘ஈரான் அதிபர் சையத் இப்ராகிம் ரைசியின் சோகமான மறைவு ஆழ்ந்த வருத்தமும் அதிர்ச்சியும் அளிக்கிறது. இந்தியா-ஈரான் இருதரப்பு உறவை வலுப்படுத்த அவரது பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும். அவரது குடும்பத்தினருக்கும் ஈரான் மக்களுக்கும் எனது மனப்பூர்வமான இரங்கல்கள். இந்த துயரமான நேரத்தில் இந்தியா ஈரானுடன் நிற்கிறது’’ என கூறி உள்ளார். ஈரானின் சபஹர் துறைமுகத்தை அடுத்த 10 ஆண்டுகள் நிர்வகிக்கும் ஒப்பந்தத்தில் இந்தியா சமீபத்தில் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலின் சதியா?
அதிபர் ரைசி மறைவுக்கு இஸ்ரேல் இதுவரை இரங்கல் தெரிவிக்கவில்லை. கடந்த மாதம் இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான டிரோன்களை ஏவி ஈரான் முதல் முறையாக நேரடி தாக்குதல் நடத்தியது. ஈரானின் அணு மின் நிலையத்தை இஸ்ரேல் நடத்திய டிரோன் தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் தாக்கியது. இந்த விவகாரத்தில் உலக நாடுகள் தலையீட்டால் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தாமல் அமைதியானது. ஆனால் சரியான நேரத்தில் பதிலடி தரப்படும் என பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்திருந்தார். இதனால், ஈரான் அதிபர் ரைசி மரணத்தில் இஸ்ரேலின் சதி இருக்குமோ என சந்தேகங்கள் எழுந்துள்ளன. இந்த குற்றச்சாட்டை பெயர் வெளியிட விரும்பாத இஸ்ரேல் உயர் அதிகாரி மறுத்துள்ளார்.

உச்ச தலைவருக்கே உச்சபட்ச அதிகாரம்
ஈரானை பொறுத்த வரையில் அதன் உச்ச தலைவரான காமனெயிடமே உச்சபட்ச அதிகாரங்கள் உள்ளன. இதனால் அதிபர் ரைசியின் மரணம் அரசு நிர்வாகத்தில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதே சமயம், காமனெயின் வாரிசாக ரைசி கருதப்பட்டார். தற்போது 85 வயதாகும் காமனெயிக்குப் பிறகு உச்ச தலைவராக ரைசி நியமிக்கப்பட அதிக வாய்ப்பிருந்தது.

* இந்தியாவில் இன்று துக்கம் அனுசரிப்பு
ஈரான் அதிபர் ரைசி மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இன்று ஒருநாள் இந்தியாவில் துக்கம் அனுசரிக்கப்படுவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து இன்று அரசு அலுவலகங்களில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்.

The post அஜர்பைஜானில் இருந்து நாடு திரும்பியபோது ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் பலி: அமைச்சர் உள்ளிட்டோரும் மரணம் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Iran ,Azerbaijan ,India ,Tehran ,President ,Ibrahim Raisi ,Foreign Minister ,Hussain Amiraptullahian ,
× RELATED ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த...