×

5ம் கட்ட மக்களவை தேர்தல் விறுவிறுப்பு; 49 தொகுதிகளில் 58% வாக்குப்பதிவு: மேற்கு வங்கத்தின் பல பகுதிகளில் வன்முறை, மோதல்

புதுடெல்லி: மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 8 மாநிலங்களில், 49 தொகுதிகளில் 5ம் கட்ட மக்களவை தேர்தல் நேற்று நடந்து முடிந்தது. இதில், 58 சதவீத வாக்குகள் பதிவாகின. மேற்கு வங்கத்தில் பல இடங்களிலும் வன்முறை, மோதல் சம்பவங்கள் நடந்ததால் பதற்றம் நிலவியது. நாடு முழுவதும் 543 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடந்து வருகிறது. இதுவரை 4 கட்ட தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளுக்கான 5ம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்தது.

இதில் 695 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், உபியின் ரேபரேலியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அமேதியில் ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி, லக்னோவில் ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங், மும்பை வடக்கில் ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல், பீகாரின் ஹாஜிபூரில் லோக் ஜனசக்தி தலைவர் சிராக் பஸ்வான், காஷ்மீரின் பாராமுல்லாவில் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா ஆகியோர் நட்சத்திர வேட்பாளர்கள் களமிறங்கினர். காலை 7 மணி முதலே மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்.

குறிப்பாக காஷ்மீரின் பாராமுல்லா தொகுதியில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். மொத்தம் 17.37 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில், மாலை 5 மணி நிலவரப்படி 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 54.21 சதவீத வாக்குகள் பதிவாகின. மாலை 6 மணி நிலவரப்படி அங்கு 59 சதவீத வாக்குப்பதிவு தாண்டியிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது அத்தொகுதியில் கடந்த 8 மக்களவை தேர்தலில் இல்லாத அதிகபட்ச வாக்குப்பதிவாகும்.

கடைசியாக கடந்த 1984ல் பாராமுல்லாவில் அதிகபட்சமாக 58.84 சதவீத வாக்குகள் பதிவாகின. அங்கு எந்த வன்முறை சம்பவமும் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதே போல, லடாக் தொகுதியில் மாலை 5 மணி நிலவரப்படி 67 சதவீத வாக்குகள் பதிவாகின. இறுதியாக 75 சதவீத வாக்குகள் வரை பதிவாக வாய்ப்பிருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி யேதிந்திர மரல்கர் நம்பிக்கை தெரிவித்தார். கடந்த 2019ல் இங்கு 71.05 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

மேற்கு வங்கத்தில் கடந்த 4ம் கட்ட தேர்தலின் போது வன்முறை சம்பவங்கள் நடந்ததால் இம்முறை 7 மக்களவை தொகுதிகளில் சுமார் 1 லட்சம் போலீசார், பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டிருந்தனர். ஆனாலும் தேர்தலில், பாராக்பூர், போங்கான், மற்றும் ஆரம்பாக் ஆகிய தொகுதிகளில் பல்வேறு பகுதிகளில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பாஜ தொண்டர்கள் இடையே மோதல் சம்பவங்கள் நடந்தன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயலிழந்ததாகவும், முகவர்களை வாக்குச்சாவடிக்குள் நுழைய விடாமல் தடுத்ததாகவும் பல்வேறு அரசியல் கட்சிகளிடம் இருந்து 1,036 புகார்கள் வந்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஹூக்ளி தொகுதியில், பாஜ சிட்டிங் எம்பியும் கட்சி வேட்பாளருமான லாக்கெட் சாட்டர்ஜி வாக்குச்சாவடி ஒன்றுக்கு சென்ற போது அங்கு திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ ஆஷிமா பத்ரா தலைமையில் அக்கட்சி தொண்டர்கள் கூடி ‘திருடன், திருடன்’ என முழக்கமிட்டதால் பதற்றம் ஏற்பட்டது. உடனடியாக அங்கு போலீசாரும், பாதுகாப்பு படையினரும் குவிக்கப்பட்டு இரு தரப்பிலும் மோதல் ஏற்படுவதை தடுத்தனர். ஹவுரா தொகுதியில் உள்ள லிலுவா பகுதியில், திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் பூத்தை கைபற்றியதாக பாஜவினர் குற்றம்சாட்டி மோதலில் ஈடுபட்டனர்.

போங்கான் தொகுதியின் கயேஷ்பூர் பகுதியில், உள்ளூர் பாஜ தலைவர் சுபீர் பிஸ்வாஸ் திரிணாமுல் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதே தொகுதியில் உள்ள கல்யாணி பகுதியில், ஒன்றிய அமைச்சரும் பாஜ வேட்பாளருமான சாந்தனு தாக்கூர், தனது போட்டி வேட்பாளரான திரிணாமுல் காங்கிரசின் பிஸ்வஜித் தாஸின் அடையாள அட்டையைப் பயன்படுத்தி வாக்குச்சாவடிக்குள் நுழைந்த ஒருவரைப் பிடித்தார். அந்த நபரை மத்திய படையினர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றினர்.

உத்தரப் பிரதேசத்தில், ராஹி தொகுதியில் உள்ள பெலா காரா கிராமத்தில் உள்ள 3 வாக்குச்சாவடிகளில் மக்களை வாக்களிக்க அனுமதிக்காமல் பாஜ கள்ள ஓட்டு போட்டதாக காங்கிரசார் குற்றம் சாட்டினர். உத்தரப்பிரதேச மாநில காங்கிரசின் அதிகாரப்பூர்வ டிவிட்டரில், ‘ரேபரேலியில் உள்ள சரேனியின் ரசூல்பூரில் பூத் எண் 5, காலை 8 மணி முதல் மூடப்பட்டுள்ளது. வாக்காளர்கள் வாக்களிக்க முடியாமல் திரும்பிச் செல்கிறார்கள். இப்படி தான் 400 இலக்கை பாஜ எட்டப் போகிறதா’’ என பதிவிடப்பட்டுள்ளது.

கோண்டா தொகுதியின் சமாஜ்வாடி வேட்பாளர் ஸ்ரேயா வர்மா, மங்காபூர் பகுதியில் உள்ள சாவடி எண் 180 மற்றும் 181ல் நியாயமான வாக்குப்பதிவு நடைபெறவில்லை என்று தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார். மகாராஷ்டிராவில் மும்பை உள்ளிட்ட பல பகுதிகளில் மிக மெதுவாக வாக்களிப்பு பணிகள் நடந்ததால் மக்கள் அவதிப்பட்டதாக சிவசேனா (உத்தவ் அணி) மூத்த தலைவர் ஆதித்யா தாக்கரே கூறினார். ஒடிசாவின் சில இடங்களிலும் வாக்கு இயந்திரங்கள் கோளாறு புகார்கள் பதிவாகியுள்ளன.

மாலை 6 மணியுடன் முடிவடைந்த வாக்குப்பதிவில், மொத்தம் 57.61 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மக்களவை தேர்தலுடன் ஒடிசாவின் கோண்டா சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் நடந்தது. இதில் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் போட்டியிட்டார். இதே போல ஒடிசாவில் 35 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் நேற்று வாக்குப்பதிவு நடந்து முடிந்தது.

* மம்தாவின் சகோதரர் பெயர் பட்டியலில் இல்லை
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் இளைய சகோதரரும் திரிணாமுல் காங்கிரஸ் விளையாட்டு பிரிவு பொறுப்பாளருமான பாபுன் பானர்ஜி ஹவுரா டவுன் தொகுதியில் நேற்று வாக்களிக்க சென்றார். அப்போது அவர் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என தேர்தல் அதிகாரிகள் கூறினார். இதனால் வாக்களிக்க முடியாமல் சோகத்துடன் சென்றார்.

இதுதொடர்பாக மீடியாக்களுக்கு கருத்து தெரிவிப்பதையும் தவிர்த்தார். முன்னதாக, ஹவுரா தொகுதியில் தனக்கு சீட் தரப்படும் என பாபுன் எதிர்பார்த்த நிலையில், சிட்டிங் எம்பி பரசுன் பானர்ஜிக்கு சீட் கொடுத்தார் மம்தா. இதனால் அதிருப்தி அடைந்த பாபுன் சுயேச்சையாக போட்டியிடுவதாகவும், பாஜவில் சேருவதாகவும் பல பொய் செய்திகள் வெளியாகின. இதனால் பாபுடனான உறவை மம்தா முறித்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

* இதுவரை தேர்தல் முடிந்த மாநிலங்கள்
நேற்றைய 5ம் கட்ட தேர்தலுடன் மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 48 தொகுதிகளுக்கும் தேர்தல் நிறைவடைந்து விட்டது. நாடு முழுவதும் 24 மாநிலங்களில் 428 தொகுதிகளில் வாக்குப்பதிவு முடிந்துள்ளது. வரும் 25 மற்றும் ஜூன் 1ம் தேதி நடக்கும் கடைசி 2 கட்ட தேர்தலில் 115 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்க உள்ளது.

* ரேபரேலி அனுமனை தரிசித்த ராகுல்
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இம்முறை கேரளாவின் வயநாடு தவிர 2வது தொகுதியாக உபி ரேபரேலியிலும் போட்டியிடுகிறார். அத்தொகுதியில் நேற்று வாக்குப்பதிவு நடந்ததைத் தொடர்ந்து அங்கு வந்த ராகுல் காந்தி அனுமன் கோயிலுக்கு சென்று வழிபட்டார். அதைத் தொடர்ந்து சில வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று பார்வையிட்டார். அப்போது அங்கு கூடியிருந்த மக்கள் ராகுலுடன் சேர்ந்து செல்பி எடுத்துக் கொண்டனர். நிருபர்கள் பலர் பேட்டி எடுக்க முயன்ற போது ராகுல், பேட்டி தராமல் சென்றார். ராகுலை எதிர்த்து பாஜவின் தினேஷ் பிரதாப் சிங் போட்டியிடுகிறார்.

The post 5ம் கட்ட மக்களவை தேர்தல் விறுவிறுப்பு; 49 தொகுதிகளில் 58% வாக்குப்பதிவு: மேற்கு வங்கத்தின் பல பகுதிகளில் வன்முறை, மோதல் appeared first on Dinakaran.

Tags : West Bengal ,New Delhi ,Maharashtra ,Uttar Pradesh ,5th Lok Sabha elections ,
× RELATED சர்ச்சை விளம்பரங்கள் விவகாரத்தில் பாஜ மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி