×

குமரி முழுவதும் விடிய விடிய மழை: பேச்சிப்பாறை அணையில் 1070 கன அடி தண்ணீர் திறப்பு

நாகர்கோவில்: குமரி மாவட்டம் முழுவதும் விடிய விடிய பலத்த மழை பெய்த நிலையில் பேச்சிப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு ஆயிரத்து 70 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக விட்டுவிட்டு சாரல் மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது. மாவட்டத்தில் 21ம் தேதி வரை கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்தநிலையில் மாவட்டத்தில் இன்றும் விடிய விடிய கனமழை கொட்டித்தீர்த்தது. ஆறுகாணி, பத்துகாணி, கீரிப்பாறை, மணலோடை, உலக்கை அருவி உள்ளிட்ட மலையோர பகுதிகள், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. நாகர்கோவில் பகுதிகளில் பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது.

நாகர்கோவில் வடசேரி காசி விஸ்வநாதர் கோயில் சந்திப்பு பகுதியில் சாலையில் ஏற்பட்ட பள்ளம் காரணமாக அதில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இன்று காலை வரை அதிகபட்சமாக பாலமோரில் 51.4 மி.மீ மழை பெய்திருந்தது. மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 486 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 538 கன அடி தண்ணீர் பாசன கால்வாயிலும், 532 கன அடி தண்ணீர் உபரியாக மறுகால் வழியாகவும் திறக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வினாடிக்கு 1070 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 49.05 அடியாகும். அணைக்கு 140 கன அடி தண்ணீர் வரத்து இருந்தது. அணை மூடப்பட்டிருந்தது.

சிற்றார்-1ல் 11.25 அடியாக நீர்மட்டம் காணப்படுகிறது. அணைக்கு 131 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது. சிற்றார்-2ல் 11.35 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு 193 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. பொய்கையில் 15.5 அடியாக நீர்மட்டம் உள்ளது. மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 14.27 அடியாகும். முக்கடல் அணையின் நீர்மட்டம் 0.1 அடியாகும். ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் கனமழை மற்றும் அதனால் ஏற்படும் வெள்ள பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில் மாநில பேரிடர் மீட்பு படை அனுப்பி வைக்கப்பட்டு அவர்கள் கன்னியாகுமரி, ஆற்றூர், ஏழுதேசப்பற்று உள்ளிட்ட இடங்களில் முகாமிட்டு மீட்டு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே தென் தமிழக கடல் பகுதியில் இன்று நள்ளிரவு வரை 0.4 மீட்டர் முதல் 1.2 மீட்டர் உயரத்திற்கு பேரலைகளுக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய கடல் தகவல் சேவை மையம் அறிவித்துள்ளது. எனவே மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், கடலோர பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்புடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தாமதமாக தொடங்கிய படகு போக்குவரத்து
கன்னியாகுமரி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. பலத்த மழை காரணமாக விவேகானந்தர் நினைவிடத்திற்கு படகு போக்குவரத்து தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருந்தது. காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தாமதமாக 9 மணிக்கு மேல் தொடங்கியது. மேலும் ஆரோக்கியபுரம் கன்னியாகுமரி, சின்னமுட்டம், கோவளம் ஆகிய பகுதிகளில் கட்டுமர மீனவர்கள் மீன்பிடிக்க செல்வில்லை.

The post குமரி முழுவதும் விடிய விடிய மழை: பேச்சிப்பாறை அணையில் 1070 கன அடி தண்ணீர் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Kumari ,Pachiparai dam ,Nagercoil ,Kumari district ,
× RELATED தொடர் மழையால் பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரி நீர் திறப்பு