×

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலில் இறந்த யானை லட்சுமி உருவத்தில் செய்யப்பட்ட பைபர் சிலை

புதுச்சேரி: உயிரிழந்த புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி உருவத்தில் பைபர் சிலை தயாரிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியின் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி. இந்த யானை, கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து 5 வயதாக இருந்தபோது 1997ல் தனியார் நிறுவனம், இக்கோயிலுக்கு வழங்கியது. லட்சுமி என பெயர் சூட்டப்பட்ட இந்த யானையை கோயில் நிர்வாகம் பராமரித்து வந்தது. புதுச்சேரி பக்தர்களுக்கு மிகவும் நெருக்கமான, செல்ல மகள் போல் யானை லட்சுமி திகழ்ந்தது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மணக்குள விநாயகர் கோயிலுக்கு வரும் பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் யானை லட்சுமியை தரிசிக்காமல் சென்றதில்லை. இந்நிலையில் லட்சுமி யானை கடந்த 2022 நவம்பர் 30ம் தேதி காலை நடைபயிற்சி சென்றபோது, கல்வே காலேஜ் பள்ளி அருகே காமாட்சியம்மன் கோயில் வீதியில் மயங்கி விழுந்து உயிரிழந்தது. திடீரென யானை லட்சுமி இறந்ததால் பக்தர்களுக்கு அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

இறந்த லட்சுமி யானை உடல், வனத்துறை ஒட்டியுள்ள குண்டுசாலையில் காளத்தீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பக்தர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும், லட்சுமி உயிரிழந்த இடத்தில் காமாட்சியம்மன் கோயில் வீதியில் 2 அடி உயரத்தில் 800 கிலோ எடையில் கற்சிலையை தனியார் அமைத்தனர். அனுமதியின்றி வைக்கப்பட்ட இந்த சிலையை போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் அதிரடியாக அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் புதுச்சேரி முருங்கப்பாக்கம் கைவினை கிராமத்தில் யானை லட்சுமியின் உருவத்தில் பைபரில் ஆன சிலை செய்யப்பட்டுள்ளது. இதற்காக களிமண் மூலம் அச்சு உருவாக்கப்பட்டு, அதனுள் பைபரை ஊற்றி இச்சிலை செய்யப்பட்டுள்ளது. 9 அடி உயரமுள்ள இந்த சிலையை கடந்த ஒரு மாதமாக புதுச்சேரியை சேர்ந்த 4 பேர் கொண்ட சிற்பக்குழுவினர் தயாரித்துள்ளனர்.

இதுபற்றி சிலையை செய்த சிற்பக்கலைஞர் கூறும்போது, புதுச்சேரி கைவினை கலைஞர்கள் கிராமத்தில் ஏராளமான சிலைகள் செய்து வருகிறோம். பூங்கா, டோல்கேட், தோட்டங்களில் வைப்பதற்காக பல்வேறு சிலைகளை செய்து வருகிறோம். இங்கு உருவாக்கப்படும் சிலைகள் இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. உயிரிழந்த மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமியைப்போல் சிலையை கடந்த ஒரு மாதமாக 4 பேர் சேர்ந்து செய்திருக்கிறோம் என்றார். மணக்குள விநாயகர் கோயில் முன்பு யானை லட்சுமி நின்ற இடத்திலேயே இந்த சிலையை வைப்பதா? அல்லது புதைக்கப்பட்ட இடத்தில் வைப்பதா? என இன்னமும் அதிகாரிகள் முடிவு செய்யப்படவில்லை. அரசு ஒப்புதல் அளித்தால் மட்டுமே இந்த சிலை வைக்கப்படும் என தெரிகிறது.

The post புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலில் இறந்த யானை லட்சுமி உருவத்தில் செய்யப்பட்ட பைபர் சிலை appeared first on Dinakaran.

Tags : Piper ,Lakshmi ,Manakulla Vinayagar Temple ,Puducherry ,Manakula Vinayagar temple ,Thiruvananthapuram, Kerala ,Manakkula Vinayagar Temple ,
× RELATED நெல்லை மாவட்ட மீனவர்கள் 9-ஆவது நாளாக...