×

தமிழகத்தில் தொடர் மழை; மருத்துவமனைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்: பொதுசுகாதாரத்துறை உத்தரவு


சென்னை: தமிழகத்தில் தொடர் மழை பெய்து வருவதால் மருத்துவமனைகளை தயார் நிலையில் வைத்து இருக்க வேண்டும் என பொதுசுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த சில தினங்களாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தென் மேற்கு பருவமழை மே மாத இறுதியில் தொடங்க உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே சுகாதாரத்துறை சார்பில் மழைக்காலத்திற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து மருத்துவமனைகளை தயார் நிலையில் வைத்து இருக்க வேண்டும் என அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் பொதுசுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பொது சுகாதாரத்துறை அனுப்பிய சுற்றறிக்கை: தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

அதுமட்டுமின்றி தென் மேற்கு பருவமழை விரைவில் தொடங்கவுள்ளது. எனவே அனைத்து மருத்துவமனைகளையும் தயார் நிலையில் வைத்து இருக்க வேண்டும். குறிப்பாக மருத்துவர்கள், செவிலியர்கள, சுகாதார பணியாளர்கள் எந்த நேரத்திலும் பணிக்கு வர தயாராக இருக்க வேண்டும். தேவையான மருந்துகளை இருப்பு வைத்து இருக்க வேண்டும். போதுமான அளவு பூச்சிக்கொல்லி மருந்து வைத்து இருக்க வேண்டும். ஆம்புலன்ஸ் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டும், மக்கள் மீட்பு மையத்தில் உணவு, தண்ணீர் உள்ளிட்டவை தயாராக இருப்பதை உறுதி செய்யவேண்டும். மேலும் அவசரகால தடுப்பூசி, படுக்கைகள் உள்ளிட்டவை தட்டுப்பாடு இல்லாமல் தயார் நிலையில் வைத்து இருக்க வேண்டும். மருத்துவமனைகளில் ஜெனரேட்டர், போதுமான அளவு எரிபொருள் வைத்து இருக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி மழைக்கு பிறகு குடிநீர் சுத்தமாக இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். காய்ச்சல், தோல் வியாதி என வருபவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும். பாம்பு உள்ளிட்ட விஷக் கடியுடன் வரும் நபர்களுக்கு முதலுதவி செய்து உடனடியாக மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பவேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளது.

The post தமிழகத்தில் தொடர் மழை; மருத்துவமனைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்: பொதுசுகாதாரத்துறை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Public Health Department ,South ,
× RELATED தமிழ்நாட்டிலுள்ள ஓவிய, சிற்பக்...