×

சென்னை சிறப்பு ரயில் 8 மணி நேரம் தாமதம்: பயணிகள் பெரும் தவிப்பு

நாகர்கோவில்: நாகர்கோவிலில் இருந்து கேரளா வழியாக சென்னை சென்ட்ரலுக்கு வாரத்தில் ஞாயிற்றுக்கிழமையில் சிறப்பு ரயில் (வண்டி எண் 06019) இயக்கப்படுகிறது. இந்த ரயில் திருவனந்தபுரம், கொல்லம், செங்கனூர், கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், காட்பாடி, அரக்கோணம் வழியாக சென்னை சென்ட்ரலை சென்றடையும். விடுமுறை தினத்தில் இயக்கப்படுவதால், பயணிகள் இந்த ரயிலில் அதிகம் பேர் பயணிக்கிறார்கள். முன் பதிவு வசதியும் உண்டு. இந்த நிலையில் நேற்று மாலை 5.45க்கு புறப்பட வேண்டிய இந்த ரயில், இரவு 11.30க்கு புறப்பட்டு செல்லும் என முதலில் அறிவித்திருந்தனர். ரயில் பெட்டிகள் பராமரிப்பு பணிகள் இருப்பதால், ரயில் சுமார் 6 மணி நேரம் தாமதமாக செல்லும் என தெரிவித்தனர்.

ஆனால் இரவு சுமார் 11.30க்கு இந்த ரயில் வரவில்லை. இதனால் ரயிலுக்காக காத்திருந்த பயணிகள், விசாரணை மையத்தை அணுகினர். அப்போது பராமரிப்பு நிறைவடைய வில்லை என தெரிவித்தனர். இதனால் ரயில் எப்போது செல்லும் என்று தெரியாமல் பயணிகள் தவித்தனர். பின்னர் அதிகாலை 1 மணிக்கு பின், பிளாட்பாரம் 3க்கு ரயில் வந்து சேரும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி பிளாட்பாரம் 3க்கு வந்த ரயில், அதிகாலை சுமார் 1.30க்கு புறப்பட்டு சென்றது. சுமார் 8 மணி நேரம் ரயில் தாமதமாக சென்றது. இந்த ரயிலுக்கு முன் பதிவு செய்திருந்த பயணிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளானார்கள்.

The post சென்னை சிறப்பு ரயில் 8 மணி நேரம் தாமதம்: பயணிகள் பெரும் தவிப்பு appeared first on Dinakaran.

Tags : Nagercoil ,Kerala ,Chennai Central ,Thiruvananthapuram ,Kollam ,Senganur ,Kottayam ,Ernakulam ,Thrissur ,Palakkad ,Bothanur ,Tirupur ,Erode ,Salem ,Katpadi ,Arakkonam ,Chennai ,
× RELATED தக்கலை பஸ் நிலையத்தை புறக்கணிக்கும் கேரள அரசு பேருந்துகள்