×

பணம் திருடியவர்களை பிடிக்க முயன்றதால் நடைபாதையில் தூங்கிய வாலிபர் மீது ஆசிட் வீச்சு: தப்பிய 4 பேருக்கு வலை

 

பெரம்பூர் மே 20: ஓட்டேரி பகுதியில் நடைபாதையில் தூங்கிக்கொண்டிருந்தவரிடம் திருட முயன்று, ஆசிட் வீசி தப்பிச் சென்ற 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். புளியந்தோப்பு கனகராஜ் தோட்டம் பகுதியில் வசித்து வருபவர் முகமது ரியாஸ் (30). இவருக்கு கடந்த 7 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி, கடந்த 4 வருடங்களாக கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவியை பிரிந்து தனியாக வசித்து வருகிறார்.

புளியந்தோப்பில் உள்ள பஞ்சர் கடை ஒன்றில் வேலை செய்யும் இவர், நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும், ஓட்டேரி கொசப்பேட்டை மார்க்கெட் புதுநகர் பகுதி நடைபாதையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத 4 பேர், இவரது பேண்ட் பாக்கெட்டில் கையை விட்டு பணத்தை எடுக்க முயன்றுள்ளனர். சுதாரித்துக் கொண்டு எழுந்த முகமது ரியாஸ், அவர்களை பிடிக்க முயன்றபோது, அவர்கள் கையில் வைத்திருந்த ஆசிட்டை முகமது ரியாஸ் மீது ஊற்றினர்.

இதில் அவருக்கு கழுத்துப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், அந்த ஆசிட் ஏசி கிளின் செய்ய பயன்படுத்துவது என்பது தெரிய வந்தது. சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம், தப்பிய 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

The post பணம் திருடியவர்களை பிடிக்க முயன்றதால் நடைபாதையில் தூங்கிய வாலிபர் மீது ஆசிட் வீச்சு: தப்பிய 4 பேருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Perambur ,Otteri ,Muhammad Riaz ,Kanagaraj Garden ,Pulianthoppu ,
× RELATED சென்னை ஓட்டேரியில் டாஸ்மாக் கடையில் ஸ்வைப்பிங் மிஷின் திருட்டு..!!