×

கல்பாக்கம் அருகே தாழ்வாக செல்லும் மின் வயரால் அபாயம்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

 

திருக்கழுக்குன்றம், மே 20: கல்பாக்கம் அருகே நல்லாத்தூர் கிராமத்தில் தாழ்வாக செல்லும் மின் வயரால் விவசாயிகள், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கல்பாக்கம் அடுத்த நல்லாத்தூர் பகுதியில் குடியிருப்பு, வயல்களுக்குச் செல்லும் மின் வயர்கள் பல மாதங்களாக தரைமட்டத்திலிருந்து 7 அடிக்கு தாழ்வாக செல்கிறது. இதனால் அவ்வழியில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஆபத்தான முறையில் சென்று வருகின்றனர்.

மேலும் விழிப்புணர்வு இல்லாமல் யாராவது கவனிக்காமல் வந்துவிடப் போகிறார்கள் என்று தாழ்வாக செல்லும் வயர்களின் அருகில் ஆபத்தை உணர்த்தும் சிவப்பு துணியை கட்டி வைத்துள்ளனர். மேலும் தாழ்வாக செல்லும் மின் வயரை பொதுமக்கள் மற்றும் விவசாயிகள், கொம்புகள் மூலம் சற்று உயர்த்தி அமைத்துள்ளனர். எனினும் லேசான காற்றடித்தாலும் அந்தக் கொம்பும், வயரும் மொத்தமாக தரையில் கீழே விழுந்து விடும் நிலையில் உள்ளது. இது சம்பந்தமாக பலமுறை நெரும்பூர் மின்வாரிய அதிகாரி உள்ளிட்டோருக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து விவசாயிகள் மற்றும் பொத மக்கள் கூறுகையில், ‘விவசாயத் தொழிலையே வாழ்வாதாரமாக எண்ணி வாழ்ந்து வரும் நாங்கள், மின் வாரியத்தினரின் அலட்சியப்போக்கால் தினமும் இந்த தாழ்வாக செல்லும் மின் வயரை கடந்து செல்ல அச்சப்பட வேண்டியுள்ளது. இதுப்பற்றி மின் வாரியத்திற்கு தகவல் தெரிவித்தால் இதை சரி செய்ய ஏழை விவசாயிகளான எங்களிடமே பணம் கேட்டு பேரம் பேசி காலம் தாழ்த்தி வருகின்றனர். இதுபோன்று ஆபத்தை விளைவிக்கும் மின் கம்பம் மற்றும் மின் வயர்களை உடனடியாக சரி செய்யவில்லையென்றால் போராட்டம் நடத்துவோம் என்றனர்.

The post கல்பாக்கம் அருகே தாழ்வாக செல்லும் மின் வயரால் அபாயம்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Kalpakkam ,Thirukkalukkunram ,Nallathur ,Dinakaran ,
× RELATED கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்தில்...