×

குழந்தை திருமணம் குறித்த தகவல் அளிக்க 24 மணி நேரமும் செயல்படும் இலவச தொலைபேசி எண் 1098

அரியலூர், மே 20:அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா வெளியிட்ட செய்தி குறிப்பு ;குழந்தை திருமண தடுப்புச் சட்டம் 2006ன் படி 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு திருமணம் செய்வது சட்டப்படி குற்றமாக கருதப்படும். அப்பெண் குழந்தையை திருமணம் செய்து கொண்ட 18 வயதிற்கு மேற்பட்ட வாலிபர் மற்றும் இளைஞர் குற்றவாளி ஆவார். குழந்தை திருமணத்தை நடக்க செய்தவர், நடத்த தூண்டியவர் நெறிப்படுத்தியவர், நடத்தியவர் இவர்கள் அனைவரும் குற்றவாளிகள் ஆவர். அக்குழந்தையை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பெற்றோர்கள் மற்றும் காப்பாளர் மற்றும் ஒரு நிறுவனத்தின் அல்லது ஒரு கூட்டத்தின் அங்கத்தினர் மற்றும் குழந்தை திருமணத்தை ஏற்பாடு செய்த அனுமதித்த, பங்கேற்ற அந்த திருமணத்தை தடுக்க தவறிய எந்த நபரும் குற்றவாளிகளாக கருதப்படுவார்கள்.

குழந்தை திருமணம் குற்றம் என்பது பிணை ஆணை வழங்கா குற்றமாக கருதப்படும். குற்றம் புரிந்தவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை அல்லது 1 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். குழந்தை திருமணம் குறித்த தகவல் அளிக்க வேண்டிய 24 மணி நேரமும் செயல்படும் இலவச தொலைபேசி எண் 1098. மேலும், மாவட்டகலெக்டர் மற்றும் தலைவர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 2வது தளம், அரசு பல்துறை வளாகம், அரியலூர் என்ற முகவரியில் நேரிலோ அல்லது தொலைபேசி எண் 04329 -296239 என்ற எண்ணிற்கு புகார் அளிக்கலாம்.மேலும், குழந்தை திருமணங்களை தடுத்திட அனைத்து கிராம ஊராட்சியில் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக்குழுவின் தலைவர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள் விழிப்புடன் கண்காணித்து குழந்தை திருமணங்கள் நடைபெறாதவாறு தடுத்திடவும், விழிப்புணர்வு வழங்கிடவும், அவ்வாறான திருமணங்கள் நடைபெற முயற்சித்தால் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அளித்திட வேண்டும் எனவும் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, தெரிவித்துள்ளார்.

The post குழந்தை திருமணம் குறித்த தகவல் அளிக்க 24 மணி நேரமும் செயல்படும் இலவச தொலைபேசி எண் 1098 appeared first on Dinakaran.

Tags : Ariyalur ,District Collector ,Annie Mary Swarna ,Dinakaran ,
× RELATED அதிமுக மாஜி எம்எல்ஏ காரில் ரூ.50ஆயிரம் திருட்டு