×

ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர், வெளியுறவு அமைச்சர் பலி?: மீட்பு படையினர் விரைவு

துபாய்: ஈரான் அதிபர் இப்ராகிம் ரெய்சி நேற்று பயணம் செய்த ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக தரையில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் அதிபர் ரெய்சி, வெளியுறவு அமைச்சர் உள்ளிட்டோர் பலியாகி இருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. ஈரான் அதிபர் இப்ராகிம் ரெய்சி நேற்று முன்தினம் அஜர்பைஜான் நாட்டிற்கு சென்றார். அங்கு இரு நாடுகள் இணைந்து கட்டி உள்ள அணை திறப்பு விழாவில் அந்த நாட்டின் அதிபர் இல்ஹாம் அலியேவுடன் கலந்து கொண்டார். பின்னர் நேற்று நாடு திரும்பிய ரெய்சி ஈரானில் உள்ள கிழக்கு அஜர்பைஜான் மகாணம், ஜோல்பா நகருக்கு நேற்று ஹெலிகாப்டரில் சென்றார். அதிபருடன் வெளியுறவு அமைச்சர் ஹோசைன் அமீர் அப்துல்லாயாகியான், அதிகாரிகளும் சென்றனர். அஜர்பைஜான் நாட்டின் எல்லையோரமாக இருக்கும் ஜோல்பா நகர் தலைநகர் டெஹ்ரானில் இருந்து 600 கிமீ தொலைவில் உள்ளது.

ஜோல்பாவில் மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் தரையிறங்கியதாகவும், அப்போது சிரமங்களை எதிர்கொண்டதாக ஈரான் அரசு ஊடகம் தெரிவித்தது. அதிபரின் ஹெலிகாப்டருக்கு பின்னால் சென்ற 2 ஹெலிகாப்டர்கள் பத்திரமாக திரும்பியுள்ளன. அதிபர் சென்ற ஹெலிகாப்டரை குறித்து எந்த தகவலும் தெரியவில்லை. ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதா, அதில் இருந்த அதிபரின் கதி என்ன ஆனது என்பது பற்றி எந்த தகவலும் இல்லை. ஆனால், ஈரான் செய்தி நிறுவனம்(இர்னா) அதிபர் ரெய்சி சென்ற ஹெலிகாப்டர் தரையில் விழுந்து நொறுங்கியது. இதில், ஏற்பட்ட உயிரிழப்புகள் அல்லது காயம் பற்றி எந்த தகவலும் இல்லை என செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த சம்பவத்தை விபத்து என குறிப்பிட்ட கிழக்கு அஜர்பைஜான் மாகாண அரசு அதிகாரி ஒருவர் விபத்து நடந்த பகுதிக்கு தான் இன்னும் செல்லவில்லை என தெரிவித்துள்ளார்.விபத்து நடந்த பகுதிக்கு மீட்பு படையினர் விரைந்துள்ளனர் என்றும் காடுகள் நிறைந்த பகுதியில் பலத்த மழை, கடும் பனிமூட்டம் காரணமாக மீட்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.டாஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவிக்கையில், அதிபர் ஹெலிகாப்டரில் சென்றவர்கள் தங்கள் செல்போனில் இருந்து அவசர அழைப்பு விடுத்துள்ளனர். இதனால் விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என குறிப்பிட்டுள்ளது.

ஈரான் உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் அகமது வகிதி,‘‘விபத்துக்கு பகுதிக்கு மீட்பு படைகள் அனுப்பப்பட்டுள்ளது. ஹெலிகாப்டருடன் ரேடியோ தொடர்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது’’ என்றார். இந்த விபத்தில் அதிபர் ரெய்சி மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் உள்ளிட்டோர் பலியாகி இருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

The post ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர், வெளியுறவு அமைச்சர் பலி?: மீட்பு படையினர் விரைவு appeared first on Dinakaran.

Tags : Iran ,minister ,Dubai ,President ,Ibrahim Raisi ,Raisi ,Foreign Minister ,Ibrahim ,
× RELATED ஈரான் அதிபர் மரணச் செய்தி அறிந்து...