×

சிங்கபெருமாள்கோவில், பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவிலில், தேரோட்டம் கோலாகலம்!

சென்னை: சிங்கபெருமாள்கோவில், பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவிலில், தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள்கோவிலில், புகழ்பெற்ற பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில், இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. பிரம்மோற்சவம், இந்த ஆண்டு, கடந்த 13 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. மூன்றாம் நாள் உற்சவமான கருடசேவை கடந்த 15ம் தேதி நடைபெற்றது. இந்த நிலையில், ஏழாம் நாள் உற்சவமான தேரோட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முன்னதாக, காலை 6:00 மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் அலங்காரம் நடந்தது. காலை 6:50 மணிக்கு, ஸ்ரீதேவி, பூதேவியருடன் பெருமாள் தேரில் எழுந்தருளினார். அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

காலை 7:00 மணிக்கு, பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்துச் சென்றனர். நான்கு மாட வீதிகள் வழியாக சென்று, காலை 10 மணிக்கு மேல் தேர் நிலைக்கு வந்தது. வழியெங்கும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று கோவிந்தா கோவிந்தா என்ற கோஷங்களை எழுப்பி சுவாமியை தரிசனம் செய்தனர். இந்த தேரோட்டத்தில் சிங்கபெருமாள்கோவில் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமவாசிகள் ஏராளமானோர், சுவாமியை தரிசனம் செய்து வழிபட்டனர். வண்டலூர் காவல் உதவி ஆணையர் ஜெயராஜ் தலைமையில் மறைமலைநகர் காவல் நிலைய ஆய்வாளர் கோவிந்தராஜ் மேற்பார்வை 200 -க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 

The post சிங்கபெருமாள்கோவில், பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவிலில், தேரோட்டம் கோலாகலம்! appeared first on Dinakaran.

Tags : Singaperumal temple ,Padalathri Narasimha Perumal ,CHENNAI ,Chariot ,Patalatri Narasimha Perumal temple ,Chengalpattu district ,Hindu Charities Department ,Brahmotsavam ,Padalatri Narasimha Perumal Temple ,
× RELATED சிங்கப்பெருமாள் கோவில் அருகே மீன்...