×

வார இறுதி நாட்களில் ₹100 கட்டணத்தில் நாள் முழுக்க மெட்ேரா ரயிலில் பயணிக்கலாம்: நிர்வாகம் அறிவிப்பு

சென்னை, மே 19: வார இறுதி நாட்களில் ₹100 கட்டணத்தில் நாள் முழுக்க மெட்ேரா ரயிலில் பயணிக்கலாம், என நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், நீண்ட தொலைவை குறைந்த நேரத்தில் கடப்பதற்காகவும் மெட்ரோ ரயில் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, கடந்த 2015ம் ஆண்டு முதல் சென்னையில் விமான நிலையம் – விம்கோ நகர், சென்ட்ரல்- பரங்கிமலை ஆகிய 2 வழித்தடங்களில் சுமார் 55 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.

ஆரம்பம் முதலாகவே சென்னைவாசிகள் மத்தியில் மெட்ரோ ரயில் சேவைக்கு சிறப்பான வரவேற்பு இருந்து வருகிறது. இதை தொடர்ந்து தற்போது ₹63,246 கோடி மதிப்பில் 118.9 கிலோ மீட்டர் தூரத்துக்கு 3 வழித்தடங்களில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணி நடைபெறுகிறது. சென்னையில் தற்போது உள்ள 2 வழித்தடங்களில், கடந்த 2023ம் ஆண்டில் மட்டும் 9.11 கோடி பேர் மெட்ரோ ரயிலில் பயணித்துள்ளனர். மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து விமான நிலையம், புறநகர் ரயில் நிலையம், பஸ் நிலையம் போன்றவற்றை இணைக்கும் வகையில் சிறிய பேருந்துகளும் தற்போது இயக்கப்படுகின்றன.

மெட்ரோ ரயில் பயணிகள் எளிய வகையில் பயணச் சீட்டுகளை பெறுவதற்காகவும், காகிதப் பயன்பாட்டைக் குறைக்கவும், டிஜிட்டல்முறைகளை ஊக்குவிப்பதற்காகவும், மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள ‘க்யூஆர்’ குறியீடுகளை ஸ்கேன் செய்து டிஜிட்டல் ‘க்யூஆர்’ பயணச் சீட்டுகளை பெறுதல், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மொபைல்ஆப் மூலம் ‘க்யூஆர்’ பயணச்சீட்டுகளை பெறுதல், வாட்ஸ்அப், பேடிஎம், போன்பே, மூலம் ‘க்யூஆர்’ பயணச்சீட்டுகளை பெறுதல் என பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்திஉள்ளது.

இதன் தொடர்ச்சியாக, மெட்ரோரயில் நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு விற்பனை செய்யும் கவுன்ட்டர்களில் வாட்ஸ்அப் மூலம்‘க்யூஆர்’ பயணச்சீட்டு பெறுவதற்கான புதிய வசதி அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், வார இறுதி நாட்களில் பயணிகளை கவரும் விதமாக மெட்ரோ நிர்வாகம் சூப்பர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ₹100 மட்டும் செலுத்தி சுற்றுலா அட்டையை பயணிகள் பெற்றுக்கொள்ளலாம். நாள் முழுவதும் மெட்ரோ ரயிலில் இந்த அட்டையை பயன்படுத்தி பயணம் செய்ய முடியும். இந்த அட்டையை பெற ₹150 செலுத்த வேண்டும். பயணம் முடிந்ததும் அடையை திருப்பிக் கொடுக்கும் போது ₹50 திருப்பி அளிக்கப்படும். மெட்ரோ ரயிலில் பயணிகள் மத்தியில் இந்த திட்டத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post வார இறுதி நாட்களில் ₹100 கட்டணத்தில் நாள் முழுக்க மெட்ேரா ரயிலில் பயணிக்கலாம்: நிர்வாகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,METRO TRAIN ,Dinakaran ,
× RELATED சென்னையில் மெட்ரோ ரயில் உதவி மேலாளரை...