×

சென்னையில் கடந்த ஏப்ரல் மாதம் 1 லட்சத்து 77 ஆயிரம் யூனிட் சூரியஒளி மின்சார உற்பத்தி: மாநகராட்சி அசத்தல்

சென்னை, மே 19: சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தி, உற்பத்தி செய்யப்படும் அனல் மின்சாரம் மற்றும் அணு மின்சார பயன்பாட்டை குறைத்து, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியான சூரியஒளி மின்சாரம் மூலம் மின்னுற்பத்தி செய்து பயன்படுத்த மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதன்படி கடந்த 2017ம் ஆண்டு ₹30 கோடி செலவில் மாநகராட்சி அலுவலகங்கள், பள்ளி கட்டிடங்கள், மருத்துவமனை கட்டிடங்கள் என 662 கட்டிடங்களில் சூரிய ஒளி மின்சார உற்பத்தி கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இதன் மூலம் மாநகராட்சிக்கு மாதம் ₹10 லட்சத்துக்கு மேல் மின் செலவு குறைந்துள்ளது. கடந்த ஒரு மாதமாக கடும் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், அதை சாதகமாக பயன்படுத்தி, மாநகராட்சி நிர்வாகம், சூரிய ஒளி மின்சார உற்பத்தியில் முழுவீச்சில் ஈடுபட்டு, கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 1 லட்சத்து 77 ஆயிரம் யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்து பயன்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘அக்டோபர் முதல் ஜனவரி மாதம் வரை சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் யூனிட் வரை தான் சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தியாகும். ஆனால் இந்த ஆண்டு கடும் வெயில் காரணமாக, ஏப்ரல் மாதம் மட்டும் அதிகபட்சமாக 1 லட்சத்து 77 ஆயிரம் யூனிட் மின்சாரம் உற்பத்தியாகியுள்ளது. இது கடந்த ஏப்ரல் மாத மின் கட்டண செலவை ₹16 லட்சம் வரை குறைத்துள்ளது. உலக அளவில் சூரிய ஒளி மின்னுற்பத்தியில் ஜப்பானை பின்னுக்குத் தள்ளி, இந்தியா 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இதில் சென்னை மாநகராட்சியும் பங்களித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது, என்றனர்.

The post சென்னையில் கடந்த ஏப்ரல் மாதம் 1 லட்சத்து 77 ஆயிரம் யூனிட் சூரியஒளி மின்சார உற்பத்தி: மாநகராட்சி அசத்தல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Municipal Corporation ,The Corporation ,Dinakaran ,
× RELATED பழைய கட்டிடத்தை காட்டி புதிய கட்டிடம்...