×

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஒரு ஏடிஎம் மட்டும் இயங்குவதால் அவதிக்குள்ளாகும் பயணிகள்:  நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்  கூடுதல் மையம் அமைக்க வலியுறுத்தல்

கூடுவாஞ்சேரி, மே 19: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஒரே ஒரு ஏடிஎம்மில் நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் காத்திருந்து பயணிகள் பணம் எடுக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவசரமாக பஸ்ஸை பிடிப்பதில் சிரமப்படுவதாக கூறும் பயணிகள், கூடுதல் ஏடிஎம் மையங்களை அமைக்க வலியுறுத்தியுள்ளனர். சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், தென் மாவட்ட மக்கள் வசதிக்காகவும் கோயம்பேட்டில் இருந்து புறநகர் பேருந்து காவல்நிலையம் வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம் ஜிஎஸ்டி சாலையோரம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் அமைக்கப்பட்டது.

இங்கிருந்து திருச்சி, சேலம், மதுரை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு தென் மாவட்டங்களுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பேருந்துகள் இயங்கி வருகின்றன. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகின்றனர். நாள் முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்வதால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பரபரப்பாக காணப்படுகிறது.
இப்படி பரபரப்பாக காணப்படும் கிளாம்பாக்கம் பேருந்து நிலைய வளாகத்திற்குள் பயணிகள் வசதிக்காக ஒரே ஒரு ஏடிஎம் மையம் மட்டும் வைக்கப்பட்டுள்ளது. இதனால் பஸ் பயணிகள் மணிக்கணக்கில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. அவசரமாக பஸ் ஏறவேண்டிய நேரத்தில் பணம் எடுப்பதற்காக ஏடிஎம்மில் வரிசையில் நின்று பணம் எடுப்பதால் பஸ் புறப்பட்டுச் சென்றுவிடுகிறது.

இதனால் வேறு ஒரு பேருந்துக்காக பயணிகள் காத்திருக்க வேண்டிய சூழல் எழுகிறது. சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பயணிகள் வலியுறுத்துகின்றனர். இதுகுறித்து பஸ் பணிகள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகையில், கேளம்பாக்கம் பேருந்து நிலையத்தின் வளாகத்திற்குள் 5 ஏடிஎம் வைப்பதற்காக இடவசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சார்பில் ஒரே ஒரு ஏடிஎம் மட்டுமே வைக்கப்பட்டுள்ளது.

அவசர அவசரமாக பேருந்தைப் பிடிக்க இங்கு வருகிறோம். ஆனால் பேருந்து நிலைய வளாகத்திற்குள் இருக்கும் ஒரே ஒரு ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கு நீண்ட வரிசையில் மணிக் கணக்கில் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் குறித்த நேரத்திற்குச் சென்று பேருந்துகளில் ஏற முடியாமல் கடும் அவதிப்பட்டு வருகிறோம். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் பலமுறை புகார் கூறியும் பலனில்லை. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

The post கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஒரு ஏடிஎம் மட்டும் இயங்குவதால் அவதிக்குள்ளாகும் பயணிகள்:  நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்  கூடுதல் மையம் அமைக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Clambakkam bus station ,Guduvanchery ,Dinakaran ,
× RELATED வண்டலூர் உயிரியல் பூங்கா 28ம் தேதி திறந்திருக்கும்