×

கனமழை எச்சரிக்கை எதிரொலி சுற்றுலா தலங்களுக்கு செல்வோர் விழிப்புடன் இருக்க வேண்டுகோள்

சென்னை: தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் சுற்றுலா தலங்களுக்கு செல்வோர் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று பேரிடர் மேலாண்மை துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. தென் தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதால் தமிழகத்தின் அனேக இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்தக் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தென்மேற்கு வங்கக்கடலில் வரும் 22ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து அது வடகிழக்கு திசையில் நகர்ந்து 24ம் தேதி வாக்கில் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் அதி கனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதனால் ஊட்டி, கொடைக்கானல், ஒகேனக்கல், தேக்கடி, தென்காசி உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்வோர் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று தமிழக அரசின் பேரிடர் மேலாண்மை துறை அறிவுறுத்தியுள்ளது. சுற்றுலா பயணிகள் அனைவரும் பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

The post கனமழை எச்சரிக்கை எதிரொலி சுற்றுலா தலங்களுக்கு செல்வோர் விழிப்புடன் இருக்க வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Disaster Management Department ,Tamil Nadu ,South Tamil Nadu ,
× RELATED தமிழக மீனவர்கள் மே 23ஆம் தேதிக்குள் கரை...