×

உக்ரைனில் எம்பிபிஎஸ் முடித்தவருக்கு தகுதிச்சான்று: தேசிய மருத்துவ ஆணையத்திற்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: உக்ரைனில் எம்பிபிஎஸ் முடித்தவருக்கு தகுதிச் சான்று வழங்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த மணிகண்டன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: கடந்த 2017ல் பிளஸ் 2 முடித்தேன். கடந்த 18.10.2017 முதல் உக்ரைன் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்து, 6 ஆண்டு மருத்துவ படிப்பை 21.6.2023ல் முடித்தேன். இந்தியா திரும்பிய பிறகு மருத்துவராக பதிவு செய்வதற்காக ஸ்கிரீனிங் சோதனைக்காக தேசிய மருத்துவ ஆணையத்தில் விண்ணப்பித்தேன். மருத்துவ படிப்பில் சேர்ந்தபோது எனக்கு 17 வயது பூர்த்தியாகவில்லை எனக்கூறி எனது கோரிக்கையை நிராகரித்து இளங்கலை மருத்துவ கல்வி வாரிய இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். அவரது உத்தரவை ரத்து செய்து, என்னை மருத்துவராக அ்ங்கீகரிக்கும் ஸ்கிரீனிங் சோதனைக்கு அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார். மருத்துவ ஆணையம் தரப்பில், மனுதாரர் இந்தியாவில் நீட் தேர்வை எழுதவில்லை. சேரும் போது 17 வயது பூர்த்தியாகவில்லை என வாதிடப்பட்டது. மனுதாரர் வக்கீல் ராம்சுந்தர்விஜய்ராஜ் ஆஜராகி, ‘‘வெளிநாட்டில் மருத்துவம் படிக்கவும் நீட் தேர்வு எழுத வேண்டும் என்பது மனுதாரர் சேர்ந்த பிறகு தான் அமலானது. எனவே, மனுதாரருக்கு அந்த உத்தரவு பொருந்தாது. வயதில் 12 நாள்கள் தான் குறைவு. ஆனால், பிளஸ் 2 முடித்த பிறகு முறையாக 6 ஆண்டு மருத்துவ படிப்பை முடித்துள்ளார். எனவே, அவருக்கு நிபந்தனைகள் பொருந்தாது’’ என்றார்.

இதையடுத்து நீதிபதி, மனுதாரர் பிளஸ் 2 முடித்த பிறகு, முறையாக 6 ஆண்டு மருத்துவ படிப்பை முடித்துள்ளார். எனவே, அவரது படிப்பை நிராகரிக்க முடியாது. மனுதாரரைப் போன்று வயதில் சில நாட்கள் குறைவாக இருந்தவர்கள் சிலருக்கு வேறு மாநிலங்களில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அது மனுதாரருக்கும் பொருந்தும். நீட் தேர்வு என்பது மனுதாரருக்கு பொருந்தாது. எனவே, ஸ்கிரீனிங் சோதனைக்கு விண்ணப்பித்த மனுதாரரின் விண்ணப்பத்தை நிராகரித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. தேசிய மருத்துவ ஆணைய செயலாளர் மனுதாரருக்கு உடனடியாக தகுதிச் சான்றும், ஹால் டிக்கெட் வழங்கி ஸ்கிரீனிங் சோதனைக்கு அனுமதி வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

The post உக்ரைனில் எம்பிபிஎஸ் முடித்தவருக்கு தகுதிச்சான்று: தேசிய மருத்துவ ஆணையத்திற்கு ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : MBBS ,Ukraine ,ICourt Branch ,National Medical Commission ,Madurai ,Manikandan ,Othanchatra, Dindigul District ,ICourt Madurai ,Ukraine… ,Dinakaran ,
× RELATED நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்...