×

அக்கவுண்டை முடக்கியதால் ஆத்திரம் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை வங்கியில் ஒப்படைக்கும் போராட்டம்

*பழநி அருகே பரபரப்பு

பழநி : பழநி அருகே வங்கி கணக்கு முடக்கப்பட்டதால் மனநலம் பாதித்த பெண்ணை வங்கியில் ஒப்படைக்கும் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே ஆயக்குடியை சேர்ந்தவர் செல்வராஜ் (58). கூலித்தொழிலாளி. இவரது மகள் ராமலட்சுமி (25). மனநலம் பாதிக்கப்பட்டவர். ராமலட்சுமி அரசு உதவித்தொகையாக மாதம் ரூ.2 ஆயிரம் வங்கி மூலம் பெற்று வந்தார். கடந்த 6 மாதங்களாக ராமலட்சுமியின் வங்கி கணக்கை ஆயக்குடியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்று முடக்கி வைத்துள்ளது. இதனால் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டும், பணம் எடுக்க முடியாத நிலைக்கு ராமலட்சுமி ஆளானார். ராமலட்சுமியின் தந்தை செல்வராஜ் இதுதொடர்பாக வங்கி நிர்வாகத்தை பலமுறை தொடர்பு கொண்டுள்ளார்.

வங்கி கணக்கில் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பான் அட்டை உள்ளிட்ட 6 ஆவணங்களில் ஒன்றையாவது இணைக்க வேண்டும். அப்போதுதான் வங்கி கணக்கை செயல்படுத்த முடியுமென வங்கி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ராமலட்சுமிக்கு இந்த ஆவணங்கள் எதுவும் இல்லை. ஆதார் அட்டைக்கான ரேகை பதிவு செய்தல், கண் விழி பதிவிற்கு ராமலட்சுமி ஒத்துழைக்கவில்லை. இதனால் ஆதார் அட்டை எடுக்க முடியாத நிலை நிலவியது. வங்கி கணக்கு முடக்கப்பட்டதால் ராமலட்சுமியை பராமரிக்க முடியாமல் பெற்றோர் தவித்து வந்தனர்.

இந்நிலையில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சார்பில் மனநலம் பாதிக்கப்பட்ட ராமலட்சுமியை வங்கியில் ஒப்படைக்கும் போராட்டம் நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர் பகத்சிங் தலைமையில் ஒன்றிய தலைவர் மணிகண்டன், ஒன்றிய செயலாளர் கண்ணுச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினரிடம் வங்கி நிர்வாகம் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது வங்கியின் நிலைப்பாட்டை எழுத்துப்பூர்வமாக தருமாறு வலியுறுத்தப்பட்டது. அதற்கு வங்கி நிர்வாகம் ஒப்பு கொண்டதை தொடர்ந்து அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

The post அக்கவுண்டை முடக்கியதால் ஆத்திரம் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை வங்கியில் ஒப்படைக்கும் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Palani Palani ,Palani ,Selvaraj ,Ayakudi ,Palani, Dindigul district ,Ramalakshmi ,Dinakaran ,
× RELATED டூவீலர் மோதி முதியவர் பலி