புதுடெல்லி: டெல்லி புதிய மதுபான கொள்கை வழக்கில் கைதான முதல்வர் கெஜ்ரிவால் மக்களவை தேர்தலையொட்டி ஜூன் 1 வரை இடைக்கால ஜாமீனில் வௌியே வந்துள்ளார். இதையடுத்து அவரை சந்திப்பதற்காக ஆம் ஆத்மி எம்.பி ஸ்வாதி மாலிவால் கடந்த திங்கள்கிழமை கெஜ்ரிவாலின் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது தன்னை முதல்வரின் உதவியாளர் பிபவ் குமார் தாக்கியதாக ஸ்வாதி மாலிவால் போலீசில் புகார் அளித்தார். அதில் , “முதல்வர் வீட்டுக்கு சென்றபோது பிபவ் குமார் அனுமதி மறுத்து, முழு பலத்துடன் என்னை தாக்கினார். மாதவிடாயில் இருந்த நான் வலியால் துடித்து, கதறிய போதும் முழு பலத்துடன் 7, 8 முறை கன்னத்தில் அறைந்தார். என்னை காலால் உதைத்தார். ஆனால் அங்கிருந்த யாரும் என்னை காப்பாற்ற வரவில்லை” என்று ஸ்வாதி மாலிவால் தெரிவித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் பிபவ் குமார் மீது டெல்லி போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்தனர்.
இந்த புகார்களின் அடிப்படையில் முதல்வர் கெஜ்ரிவாலின் வீட்டில் காவல்துறையினரும், தடயவியல் நிபுணர்களும் சோதனை நடத்தினர். அப்போது ஸ்வாதி மாலிவால் தனக்கு நேர்ந்ததை நடித்து காட்டினார். இதனிடையே ஸ்வாதி மாலிவாலை நேற்று காலை திஸ் ஹசாரி நீதிமன்றத்துக்கு பலத்த பாதுகாப்புடன் காவல்துறையினர் அழைத்து சென்றனர். அப்போது நீதிபதி முன் தனக்கு நேரிட்டதை வாக்கு மூலமாக மாலிவால் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக “மாலிவால் மீது அப்படியொரு தாக்குதல் நடத்தப்படவே இல்லை” என ஆம் ஆத்மி அமைச்சர் அடிசி கூறியுள்ளார். இதுகுறித்து அடிசி புதிய காணொலியை வௌியிட்டுள்ளார். அதில், முதல்வர் இல்லத்தில் பார்வையாளர் அறையில் அமர்ந்திருந்த ஸ்வாதி மாலிவால் முதல்வர் வீட்டு காவலர்களை திட்டுகிறார். பின்னர், பாதுகாவலர்களை மீறி முதல்வர் அறைக்குள் செல்ல முயலும் காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த விவகாரத்தில் முதல்வர் கெஜ்ரிவாலை பிரச்னைகளில் சிக்க வைக்க பாஜ சதி செய்வதாக அமைச்சர் அடிசி குற்றம்சாட்டி உள்ளார்.
The post பெண் எம்.பி தாக்கப்பட்ட விவகாரம் கெஜ்ரிவால் வீட்டில் போலீஸ் விசாரணை: பொய் புகார்: வீடியோ ஆதாரம் வெளியிட்டது ஆம்ஆத்மி appeared first on Dinakaran.