×

பெரியார் பல்கலையில் பல்வேறு குற்றசாட்டுகளில் சிக்கிய முறைகேடு பதிவாளருக்கு ரூ.75000 பென்சன் வழங்க துணை வேந்தர் உத்தரவால் சர்ச்சை: ஆசிரியர் சங்கம், ஊழியர்கள் கடும் எதிர்ப்பு

சேலம்: பெரியார் பல்கலையில் பல்வேறு குற்றசாட்டுகளில் சிக்கிய முறைகேடு பதிவாளருக்கு ரூ.75000 பென்சன் வழங்க துணை வேந்தர் உத்தரவால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இதற்கு ஆசிரியர் சங்கத்தினர், ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், பொறுப்பு பதிவாளராக இருந்த கணினி அறிவியல் துறைத்தலைவர் தங்கவேலு, தமிழ்துறை தலைவர் பெரியசாமி ஆகியோர் மீது பல்வேறு முறைகேடு புகார்கள் எழுந்தது.

இதுதொடர்பாக தமிழ்நாடு உயர்கல்வித்துறை உத்தரவின் பேரில் ஐஏஎஸ் அதிகாரி பழனிசாமி தலைமையிலான இருநபர் குழு விசாரணை நடத்தியதில், மூவர் மீதும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே பொறுப்பு பதிவாளராக இருந்த கணினி அறிவியல் துறை தலைவர் தங்கவேலுவை கடந்த பிப்ரவரி மாத இறுதியில் சஸ்பெண்ட் செய்ய உயர்கல்வித்துறை அறிவுறுத்தியது. ஆனால், அந்த உத்தரவை மீறி பதிவாளர் தங்கவேலுவை பணி ஓய்வு பெற துணைவேந்தர் ஜெகநாதன் அனுமதித்தார். அதன்படி அவரும் பிப்ரவரி 29ம் தேதி பணி ஓய்வு பெற்றார்.

இந்நிலையில், மாஜி பதிவாளர் தங்கவேலுவுக்கு பணி ஓய்வு பண பலன்களை வழங்குவது தொடர்பான ஆணையை பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், தற்போதைய பதிவாளர் (பொ) விஸ்வநாதமூர்த்தி ஆகியோர் பிறப்பித்துள்ளனர். அந்த ஆணையில், மாஜி பதிவாளர் தங்கவேலுக்கு மாதாந்திர ஓய்வூதியம் ரூ.74,700 வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், ஈட்டிய விடுப்பூதியம் 165 நாட்களுக்கு முழு ஊதியமாகவும், ஈட்டா விடுப்பூதியம் 81 நாட்களுக்கு முழு ஊதியமாகவும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

முறைகேடு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட மாஜி பதிவாளர் தங்கவேலுக்கு ஓய்வூதியம் வழங்க துணைவேந்தர் ஜெகநாதன் உத்தரவு பிறப்பித்திருப்பது பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
மேலும், விதிமுறைகளை மீறி இந்த ஓய்வூதிய உத்தரவு ஆணை வழங்கப்பட்டுள்ளதால் பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர், நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும், போராட்டம் நடத்தவும் முடிவு செய்து உள்ளனர். துணை வேந்தர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி உள்ளனர்.

* முறைகேடு அறிக்கை கவர்னரிடம் சமர்ப்பிப்பு
பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் சக்திவேல் கூறுகையில், ‘‘பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர், மாஜி பதிவாளர் உள்ளிட்டோர் மீதான முறைகேடு புகார்கள் பற்றி ஐஏஎஸ் அதிகாரி பழனிசாமி தலைமையிலான இரு நபர் குழு விசாரணை நடத்தியது. அதில், அவர்கள் மீதான முறைகேடுகள் நிரூபணமானது. அதன் அறிக்கையை அக்குழு தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறைக்கு வழங்கியது. தற்போது அந்த அறிக்கையை பல்கலைக்கழகத்தின் வேந்தரான கவர்னருக்கு அரசு அனுப்பி வைத்துள்ளது. இந்த முறைகேடு அறிக்கை கவர்னர் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில்தான், தற்போது மாஜி பதிவாளர் தங்கவேலுக்கு விதிகளை மீறி ஓய்வூதியம் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது,’’ என்றார்.

The post பெரியார் பல்கலையில் பல்வேறு குற்றசாட்டுகளில் சிக்கிய முறைகேடு பதிவாளருக்கு ரூ.75000 பென்சன் வழங்க துணை வேந்தர் உத்தரவால் சர்ச்சை: ஆசிரியர் சங்கம், ஊழியர்கள் கடும் எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Periyar University ,Salem ,Salem Periyar University ,Vice-Chancellor ,Jaganathan ,Dinakaran ,
× RELATED சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர்...