×

பெண்கள் இலவச பஸ் பயணத்தை எதிர்த்த மோடி பேச்சுக்கு தலைவர்கள் கண்டனம்: மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்ற திட்டத்தை பொறுக்க முடியாமல் குறை கூறுவதா என விமர்சனம்

புதுடெல்லி: பல்வேறு மாநிலங்களில் பெண்களுக்கு இலவச பஸ் வசதி அளிக்கப்படுவதால், அங்கு மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதிக பஸ்கள் இயக்கப்படுவதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டுள்ளதாக சர்ச்சைக்குரிய வகையில் பிரதமர் மோடி பேசியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்ற இந்த திட்டத்தை கண்டு பொறுக்க முடியாமல், பிரதமர் இதை எதிர்ப்பதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் 4 கட்ட மக்களவைத் தேர்தல் இது வரை நடந்து முடிந்துள்ளது. இன்னும் 3 கட்டத் தேர்தல் பாக்கியுள்ள நிலையில், 5வது கட்டத் தேர்தல் வரும் திங்கள்கிழமை நடைபெறுகிறது. தென் மாநிலங்களில் தேர்தல் முடிந்து விட்டது. வட மாநிலங்களில் மட்டுமே தேர்தல் நடைபெறுகிறது. இதனால் வடமாநில வாக்காளர்களை கவரும் வகையில் பிரதமர் மோடி பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.  அதில் தென் மாநிலங்களில், இந்தியா கூட்டணி கட்சிகள் வடமாநில மக்களை குறிப்பாக உ.பி. மக்களை பற்றி அவதூறாக பிரசாரம் செய்ததாக ஆதாரமற்ற குற்றச்சாட்டை முன் வைத்தார்.

அத்தோடு, ராமர் கோயிலை இடித்துவிடுவார்கள், இடஒதுக்கீட்டை பறித்து முஸ்லிம்களுக்கு கொடுத்துவிடுவார்கள், பரம்பரை சொத்துக்களையும் அபகரித்து முஸ்லிம்களுக்கு தர காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது என்றும் அவர் பிரசாரம் செய்து வருகிறார். மக்களை மத ரீதியில் பிரித்து வாக்குகளை பெற பிரதமர் மோடி பேசி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். அதேநேரத்தில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஏழை மக்களுக்கு பல்வேறு இலவச திட்டங்களை அறிவித்து பேசி வருகின்றனர்.

குறிப்பாக, பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதி உதவி, ரேஷனில் 10 கிலோ உணவு தானியம் இலவசம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட உத்தரவாதங்களை அளித்து இந்தியா கூட்டணி செய்து வரும் பிரசாரம் மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தநிலையில், சில பத்திரிகையாளர்களை தேர்வு செய்து அவர்களை நேரில் அழைத்து பிரதமர் மோடி பேட்டி அளித்தார். அப்போது , ‘‘பல்வேறு பெண்களுக்கு இலவச பஸ் பயணத்தை வழங்கும் சில அரசியல் கட்சிகளால், மெட்ரோ ரயிலில் பயணிக்க ஆள் இல்லை.

பஸ்கள் அதிகம் இயக்குவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சுற்றுச்சூழலுக்கும் கேடு ஏற்படுகிறது என்று பேசியிருந்தார். இந்தியாவில் முதல் முறையாக தமிழ்நாட்டில் தான் பெண்களுக்கு இலவச பேருந்து சேவை திட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலினால் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதால், எதிர்க்கட்சிகள் ஆளும் கர்நாடகா, தெலங்கானா, கேரளா, டெல்லி, பஞ்சாப் ஆகிய மாநிலத்திலும் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த திட்டம் அங்கும் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுகிறது.

இதனால் இந்த திட்டம் நாடு முழுவதும் தீவிரமாக அமல்படுத்தப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதற்கு மக்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால்தான் பிரதமர் மோடி இந்த திட்டத்தை மறைமுகமாக குறிப்பிட்டு பெண்களுக்கு இலவச பேருந்து திட்டம் குறித்து சுற்றுச்சூழலுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார் என்று எதிர்க்கட்சிகள் அவருக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது டிவிட்டர் பதிவில், பிரதமர் மோடி, பெண்களுக்கு பஸ்சில் இலவச பயண வசதி அளிக்கப்பட்டுள்ளதை வெளிப்படையாக எதிர்க்கிறார்.

நாடு முழுவதும் இந்த வசதி வேண்டும் என்று பெண்கள் நினைக்கும் போது, பெண்களுக்கு இலவச பஸ் பயண திட்டத்தையே ரத்து செய்ய பிரதமர் முயற்சிக்கிறார். பிரதமரும், அவரது அமைச்சர்களும் இலவசமாக விமானத்தில் பறக்கும் போது பெண்கள் ஏன் பஸ்சில் இலவசமாக பயணிக்கக் கூடாது என்று தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். தமிழக அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், பிரதமர் மோடி ஏன் 10 ஆண்டுகளில் பத்திரிகையாளர் சந்திப்புகள் நடத்தவில்லை.

தமிழகத்தில் சென்னையில் மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. மெட்ரோவுக்கு பேருந்து நேரடி மாற்று சேவை இல்லை. பொதுப் போக்குவரத்தில் (மாணவர்கள், வயதானவர்கள், மாதாந்திர பாஸ், முதலியன) பயணத்திற்கான சில வகையான சலுகைகள் வழங்கப்படவில்லையா? பேருந்து சேவையானது மெட்ரோவின் நம்பகத்தன்மையை பாதிக்கிறதா? மற்ற நகரங்களில் உள்ள பல பெருநகரங்கள் நிதியுதவி பெற்ற பிறகு அறிவிக்கப்பட்ட பிறகும் சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத்திற்கான பங்கு முதலீடு ஏன் பல ஆண்டுகளாக ஒன்றிய அமைச்சரவையால் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது.

இதனால், மெட்ரோ விரிவாக்க பணிகள் தாமதமாகி உள்ளது. பெண்களுக்கு பேருந்தில் இலவசமா என்று சொல்பவர்கள், இல்லாத மெட்ரோ பாதைகளில் பயணிக்க முடியாது என்று அவர்கள் சுட்டிக்காட்டியிருக்கலாம். இவ்வாறு தனது டிவிட்டரில் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். அதேபோல, டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலும், பிரதமர் மோடியின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தால் பெண்கள் பெரிய அளவில் பயன் அடைந்துள்ளனர். பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இவ்வாறு நாடு முழுவதும் பிரதமர் மோடியின் பேச்சுக்கு கண்டனம் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறுகையில், மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டத்தின் மீது மோடியின் கவனம் திரும்பியிருக்கிறது. மாநில அரசுகள் ஏழைகளுக்கு ஏதாவது உதவிகள் செய்தால் உடனடியாக அதை இலவசம், ரவுடி கலாச்சாரம் என்று எகத்தாளமாக பேசும் நரேந்திர மோடி இப்போது தமிழகத்தில் நடைமுறையில் இருக்கும் மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டத்தின் மீது தாக்குதல் தொடுத்திருக்கிறார்.

இந்த பயணத்தின் காரணமாக மெட்ரோ ரயிலில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை 50 சதவிகிதம் குறைந்து விட்டதாகவும் கண்ணீர் வடித்திருக்கிறார். தமிழகத்தில் 2021 முதல் மகளிர் இலவச பேருந்து பயண திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. கோவிட் காலமான 2021ல் மெட்ரோ ரயிலில் 2.53 கோடி பேர் பயணம் செய்துள்ளனர். 2022ல் இது 6.09 கோடி பேர் பயணம் செய்துள்ளனர். 2023ம் ஆண்டில் இது 9.11 கோடியாக மாறியுள்ளது.

ஆண்டுக்கு ஆண்டு மெட்ரோ ரயில் பயணிகள் எண்ணிக்கை கோடிக்கணக்கில் அதிகரித்திருக்கிறதே தவிர குறையவில்லை. மோடி பொய் பேசியிருக்கிறார். இதுஒருபுறமிருக்க, சென்னைக்கு இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகளுக்கு ஒரு நயா பைசா கூட இன்றளவும் ஒதுக்கவில்லை. அதானிகளுக்கான அரசாங்கத்தை நடத்தும் நரேந்திர மோடி அன்றாடங்காய்ச்சிகளுக்கான சலுகைகளை பார்த்து வயிறு எரிவதும், எரிச்சல்படுவதும் இயல்புதான் என்றாலும், ஒரு பிரதமர் என்கிற முறையில் அவரது பேச்சு முற்றிலும் கடும் கண்டனத்திற்குரியது.

தமிழகத்தில் சென்னையில் இரண்டு வழித்தடங்களில் மட்டும் தான் மெட்ரோ இரயில் இயங்குகிறது. மகளிர் இலவச பேருந்து பயணம் தமிழகத்தின் மூலைமுடுக்குகளில் இருக்கிற அனைவருக்கும் பலனளிக்கிறது. இத்திட்டத்தினை விமர்சித்து பெருமுதலாளிகளுக்கான பிரதமராகவே தான் இருப்பதை இதன் மூலம் மோடி மீண்டும் ஒருமுறை வெளிப்படையாக அறிவித்துள்ளார் என்று கூறியுள்ளார்.

* இந்தியாவில் முதல் முறையாக தமிழ்நாட்டில் தான் பெண்களுக்கு இலவச பேருந்து சேவை திட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலினால் கடந்த 2021ல் அறிமுகம் செய்யப்பட்டது.

* தமிழ்நாட்டை பின்பற்றி கர்நாடகா, தெலங்கானா, கேரளா, டெல்லி, பஞ்சாப் ஆகிய மாநிலத்திலும் அறிமுகப்படுத்தப்பட்டன.

* சென்னையை பொறுத்தவரை இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு மெட்ரோ ரயில்களில் பயணம் செய்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

The post பெண்கள் இலவச பஸ் பயணத்தை எதிர்த்த மோடி பேச்சுக்கு தலைவர்கள் கண்டனம்: மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்ற திட்டத்தை பொறுக்க முடியாமல் குறை கூறுவதா என விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Modi ,
× RELATED இந்தியா ஓட்டளித்து விட்டது இந்தியா...