×

49 தொகுதிகளில் இறுதிகட்ட வாக்குசேகரிப்பு: 5ம் கட்ட தேர்தல் பிரசாரம் நாளை ஓய்கிறது: ராகுல், ராஜ்நாத் சிங், ஸ்மிருதி, உமர் அப்துல்லா போட்டி

புதுடெல்லி: உத்தரபிரதேசம் உட்பட 49 தொகுதிகளில் நாளை 5ம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. ராகுல் காந்தி, ராஜ்நாத் சிங், ஸ்மிருதி, உமர் அப்துல்லா போன்ற பிரபலங்களின் வெற்றி வாய்ப்பு இந்த தேர்தலில் தீர்மானிக்கப்படுகிறது. நாடு முழுவதும் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 4 கட்ட தேர்தல்கள் நிறைவடைந்துள்ளன. நான்கு கட்ட வாக்குப்பதிவுகள் முறையே 66.14 சதவீதம், 66.71 சதவீதம், 65.68 சதவீதம், 67 சதவீத என்ற அடிப்படையில் வாக்குகள் பதிவாகியுள்ளன.மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் சூரத் மக்களவை தொகுதிக்கு பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அதனால் 542 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது.

இதுவரை நான்கு கட்டங்களையும் சேர்த்து 379 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நாளை மறுநாள் (மே 20) 5ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. நாளை மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. ெமாத்தம் 49 பதவிக்கு 695 பேர் போட்டியிட்டுள்ளனர். பீகாரில் 5 தொகுதிகள், ஜம்மு – காஷ்மீரில் ஒரு தொகுதி, லடாக் தொகுதி, ஜார்கண்டில் 3 தொகுதிகள், மகாராஷ்டிராவில் 13 தொகுதிகள், ஒடிசாவில் 5 தொகுதிகள், உத்தரபிரதேசத்தில் 14 தொகுதிகள், மேற்குவங்கத்தில் 7 தொகுதிகள் என 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 49 தொகுதிகளில் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இத்துடன் ஒடிசா மாநிலத்தில் 35 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மேற்கண்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள, ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக ‘இந்தியா’ கூட்டணித் தலைவர்கள் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர். மேற்கண்ட 49 தொகுதிகளில் நட்சத்திர வேட்பாளர்கள் பட்டியலில், பீகாரின் ஹாஜிபூரில் சிராக் பாஸ்வான் (லோக் ஜனசக்தி), பீகாரின் சரண் தொகுதியில் ஒன்றிய அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி (பாஜக); இவரை எதிர்த்து லாலு பிரசாத் யாதவின் மகள் ரோகினி ஆச்சார்யா (ஆர்ஜேடி), மகாராஷ்டிராவின் மும்பை வடக்கில் ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் (பாஜக), உத்தரபிரதேசத்தின் ரேபரேலியில் ராகுல் காந்தி (காங்கிரஸ்), உத்தரபிரதேசத்தின் அமேதியில் ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி (பாஜக),

உத்தரப் பிரதேசத்திவ் கைசர்கஞ்ச்சில் கரண் பூஷன் சிங் (பாலியல் புகாரில் சிக்கிய பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சிங்கின் மகன்), ஜம்மு – காஷ்மீரின் பாரமுல்லாவில் உமர் அப்துல்லா (ஜேகேஎன்சி), உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மகாராஷ்டிராவின் கல்யாண் தொகுதியில் அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டே (சிவசேனா) உள்ளிட்டோர் போட்டியிட்டுள்ளனர். மேற்கண்ட பட்டியலின்படி 4 ஒன்றிய அமைச்சர்கள், ஒரு முன்னாள் முதல்வர் ஆகியோரின் அரசியல் எதிர்காலம் உள்ளது. நாளை மாலையுடன் (மே 18) தேர்தல் பிரசாரம் ஓய்வதால், அரசியல் கட்சித் தலைவர்கள் கடைசி கட்ட பிரசாரத்தில் இறங்கியுள்ளனர்.

தலைமை தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. ஐந்தாம் கட்ட தேர்தல் முடிந்தால், மொத்தம் 428 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நிறைவுபெறுகிறது. மீதமுள்ள 2 கட்ட தேர்தல்களும் வரும் 25 மற்றும் ஜூன் 1ம் தேதியுடன் முடிவுற்ற பின்னர் ஜூன் 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

The post 49 தொகுதிகளில் இறுதிகட்ட வாக்குசேகரிப்பு: 5ம் கட்ட தேர்தல் பிரசாரம் நாளை ஓய்கிறது: ராகுல், ராஜ்நாத் சிங், ஸ்மிருதி, உமர் அப்துல்லா போட்டி appeared first on Dinakaran.

Tags : Rahul ,Rajnath Singh ,Smriti ,Umar Abdullah ,New Delhi ,Uttar Pradesh ,Rahul Gandhi ,Dinakaran ,
× RELATED 20ம் தேதி 5ம் கட்ட தேர்தல் 49 தொகுதிகளில்...