×

கோவை முன்னாள் மேயரும், 2 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவருமான தா.மலரவன் மறைவுக்கு ஓ.பன்னீர்செல்வம் இரங்கல்

சென்னை: கோவை முன்னாள் மேயரும், 2 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவருமான தா.மலரவன் மறைவுக்கு ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார். தா.மலரவன் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். மலரவனை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

கோவை கணபதி பகுதியை சேர்ந்தவர் தா.மலரவன். இவர் கடந்த 2001ம் ஆண்டு அதிமுக சார்பில் கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து 2006ம் ஆண்டு கோவை மேற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக வெற்றி பெற்றார். 2011ம் ஆண்டு இந்த தொகுதி மறுசீரமைக்கப்பட்டு கோவை வடக்கு தொகுதி என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மீண்டும் இந்த தொகுதியில் போட்டியிட்ட தா.மலரவன், சுமார் 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினராக பதவி வகித்தார்.

இதைத் தொடர்ந்து அதிமுகவின் பல்வேறு பொறுப்புகளிலும் பதவி வகித்துள்ளார். கடந்த 2020ம் ஆண்டு முதல் உடல் நலக்குறைவு காரணமாக அவர் தனது வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். அதிமுகவில் தலைமை குழப்பம் ஏற்பட்டபோது, இவர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளராக இருந்தார். அதன் பின்னர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் கட்சியின் செயல்பாடுகளில் இருந்து விலகி இருந்தார்.

இந்த நிலையில் இன்று மதியம் 12 மணியளவில் வீட்டில் சிகிச்சையில் பெற்று வந்த தா.மலரவனின் உயிர் பிரிந்தது. இதையடுத்து அதிமுகவினர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கோயம்புத்தூர் மாநகராட்சி மேயராக‌ திறம்பட பணியாற்றியவரும் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக சிறப்புடன் பணியாற்றியவரும் அம்மா அவர்களின் அன்பைப் பெற்றவருமான தா.மலரவன் அவர்கள் காலமானார் என்ற‌ செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்.

மலரவன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

 

The post கோவை முன்னாள் மேயரும், 2 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவருமான தா.மலரவன் மறைவுக்கு ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Former mayor ,Goa ,M. L. A. ,Pannirselvam ,Chennai ,Paneer Selvam ,Malaravan ,Paneer Selvam Mourngal ,
× RELATED தகாத உறவுக்கு இடையூறாக இருந்ததால்...