×

பானிபூரி தயாரிக்கும் இடங்களில் உணவுத்துறை அதிகாரிகள் ஆய்வு: கெட்டுபோன உருளைக்கிழங்கு, ஜீரா அழிப்பு

அவிநாசி: பானிபூரி தயாரிக்கும் இடங்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தி கெட்டுப்போன ஜீரா, உருளைக்கிழங்கு உள்ளிட்டவைகளை அழித்தனர். திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் சுகாதாரமற்ற முறையில் பானிபூரி தயாரிப்பதாக மாவட்ட கலெக்டருக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து அவரது உத்தரவின்படி, மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமனஅலுவலர் விஜயலலிதாம்பிகை அறிவுறுத்தலின்படி, அவிநாசியில் பானிபூரி தயாரிக்கும் பல்வேறு இடங்களில் உணவு பாதுகாப்பு அலுவலர் ஸ்டாலின்பிரபு, சுகாதார ஆய்வாளர் கருப்பசாமி ஆகியோர் பேரூராட்சி பணியாளர்களுடன் இணைந்து ஆய்வு செய்தனர். இதில், அவிநாசி கைகாட்டிபுதூர், கோவை ரோடு, அஞ்சலக வீதி உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட இடங்களில் பானிபூரி தயாரிப்பாளர்கள் கண்டறியப்பட்டு சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அங்கு சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்டு குடங்கள், பானைகள் மற்றும் பிளாஸ்டிக் கேன்களில் வைக்கப்பட்டிருந்த 120 லிட்டர் ஜீரா, 20 கிலோ கெட்டுப்போன உருளைக்கிழங்கு, காலாவதியான 3 கிலோ கோதுமை மாவு, 200 கிராம் கலர் பொடிகளை கைப்பற்றி அழித்தனர். இதைத்தொடர்ந்து பானிபூரி தயாரிப்பாளர்களுக்கு உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006 மற்றும் விதிகள் அடிப்படையில், உணவு தயாரிக்கும் இடங்கள் மற்றும் உணவு பொருட்களை சுத்தமாக வைத்துக் கொள்ள அறிவுரை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தரமற்ற உணவு பொருட்கள் தயாரிப்பு குறித்து பொதுமக்கள் 94440 42322 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்று தெரிவித்தனர்.

 

The post பானிபூரி தயாரிக்கும் இடங்களில் உணவுத்துறை அதிகாரிகள் ஆய்வு: கெட்டுபோன உருளைக்கிழங்கு, ஜீரா அழிப்பு appeared first on Dinakaran.

Tags : panipuri ,Avinasi ,Food Safety Department ,Tirupur ,
× RELATED கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில்...