×

நான் முதல்வன் திட்டத்தில் 70,520 மாணவர்கள் பயன்

நாமக்கல், மே 17: நாமக்கல் மாவட்டத்தில் 2 ஆண்டில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 70 ஆயிரம் மாணவ, மாணவியர் பயன் அடைந்துள்ளனர். தமிழகத்தில், பிளஸ்2 அரசுபொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் அனைவரும் உயர்கல்வியில் சேரவும், உயர்கல்வியில் சேர்ந்த மாணவ, மாணவியருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கித்தரும் நோக்கில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நான் முதல்வன் திட்டத்தை கடந்த 2022ம் ஆண்டு தொடங்கினார்.

இத்திட்டத்தின் நோக்கம் 12ம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்கள் தங்களின் எதிர்கால கனவினை நனவாக்கும் வகையில், அவர்களின் உயர்கல்விக்கான வாய்ப்புகள் உள்ள பாடப்பிரிவு வாரியான பட்டப்படிப்புகள், பட்டய படிப்புகள் மற்றும் கல்லூரிகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்பதையும், மேற்படிப்பினை முடித்தவுடன் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் போன்ற விவரங்கள், புகழ்பெற்ற வல்லுனர்கள் மற்றும் கல்வியாளர்களைக் கொண்டு வழிகாட்டுதல்கள் வழங்கப்படவுள்ளன.

இத்தகைய நிகழ்ச்சிகள் மாணவர்களின் எதிர்கால குறிக்கோளை திட்டமிட்டு அடையவும் வெற்றி பெறவும் வழிவகை செய்கிறது. தமிழகத்தில், கடந்த 2022- 23ம் கல்வியாண்டில் அரசு பள்ளியில் பயின்று 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற 3,30,628 மாணவர்களுக்கு உயர்கல்விக்கு, உயர்கல்வி வழிகாட்டுதலின் மூலமாக 2,43,710 மாணவர்கள் மருத்துவம், பொறியியல், கலை மற்றும் அறிவியல், சட்டம், பாலிடெக்னிக் மற்றும் இதர உயர்கல்வி படிப்புகளில் சேர்ந்துள்ளனர். தமிழ்நாட்டின் மாணவ, மாணவிகளின் தனித்திறமைகளை அடையாளம் கண்டு அதனை ஊக்குவிக்கும் வகையில், நான் முதல்வன் என்ற முதலமைச்சரின் கனவுத்திட்டத்தின் மூலம் 28 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு, பல்வேறு திறன் சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.

நாமக்கல் மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பொறியியல் கல்லூரியில் பயிலும் 37,127 மாணவ, மாணவியர்களும், கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் 24,018 மாணவ, மாணவியர்களும், பாலிடெக்னிக் கல்லூரியில் 8,844 மாணவ, மாணவியர்களும், தொழில் பயிற்சி நிலையத்தில் பயிலும் 531 மாணவ, மாணவியர்கள் என மொத்தம் 70,520 மாணவ, மாணவியர் கடந்த இரண்டு ஆண்டுகளில் பயன்பெற்றுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில், இந்த ஆண்டு பிளஸ்2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் அனைவரும் உயர்கல்வியில் சேருவதற்கு வழிகாட்டும் வகையில், உயர்கல்வியின் முக்கியத்துவம், உயர்கல்விக்கு கிடைக்கும் கல்வி உதவித் தொகை மற்றும் கல்வி கடன் வசதி சார்ந்த தகவல்கள் குறித்தும், தகவல்கள் அளிக்கும் வகையில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 2 இடங்களில் கல்லூரி கனவு நிகழ்ச்சியை, மாவட்ட நிர்வாகம் நடத்தியுள்ளது. இதில் ஏராளமான மாணவ, மாணவியர் கலந்து கொண்டு பயன் பெற்றுள்ளனர்.

The post நான் முதல்வன் திட்டத்தில் 70,520 மாணவர்கள் பயன் appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Tamil Nadu ,
× RELATED நாமக்கல் மாவட்டத்தில் 12 அரசு...