×

தமிழகத்தில் மொத்தமுள்ள 39 மையங்களில் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அலுவலர்களுக்கு அடுத்த வாரம் பயிற்சி: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை: தமிழகத்தில் மொத்தமுள்ள 39 மையங்களில் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அலுவலர்களுக்கு அடுத்த வாரம் பயிற்சி தொடங்கும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.

தமிழகத்தில் மொத்தமுள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும் ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேதி வாக்குப்பதிவு முடிந்தது. வாக்குப்பெட்டி இயந்திரங்கள் 39 வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள், வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் குறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கடந்த சில தினங்களாக திருவள்ளூர், ராமநாதபுரம், தூத்துக்குடி தொகுதிகளில் ஆய்வு செய்தார்.

இந்நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:
வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியாக செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, ஸ்டிராங் ரூம் முன்பு கூடுதல் கேமரா பொருத்தப்பட்டு, மின்சாரம் தடைபட்டாலும் அந்த கேமரா இயங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தமுள்ள 39 மையங்களில் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அலுவலர்களுக்கான பயிற்சி அடுத்த வாரம் தொடங்கும். அனைத்து மாவட்டங்களிலும் ஒரே மாதிரியாக இல்லாமல், மாவட்ட தேர்தல் அலுவலர்கள் பயிற்சிக்கான தேதியை முடிவு செய்வார்கள்.

தற்போது அண்டை மாநிலங்களில் வாக்குப்பதிவு முடிந்துள்ளதால், எல்லையோர மாவட்டங்களில் நிறுத்தப்பட்டுள்ள பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழுக்கள் திரும்ப பெறப்பட்டுள்ளனர். அதேநேரம் எல்லை பகுதிகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் வழக்கமான சோதனை தொடர்ந்து நடைபெறும். இந்த சோதனைச்சாவடிகளில் வெளிமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களில் பிடிபடும் ரொக்கம் உள்ளிட்டவற்றின் மதிப்பு, அந்தந்த அண்டை மாநிலங்களுக்கும் தெரிவிக்கப்படும்.

அதேபோல், அவர்களும் பிடிபடும் ரொக்கம், பொருட்களின் விவரங்களை தெரிவிப்பார்கள். வருமான வரி துறையால் பிடிக்கப்படும் தொகை குறித்த விவரங்கள் நேரடியாக தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கப்படும். வாக்கு எண்ணிக்கையின்போது, ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு நுண் பார்வையாளர் நியமிக்கப்படுவார். தேர்தலின் போது பணியாற்றிய மத்திய பார்வையாளர்கள் வாக்கு எண்ணிக்கையின் போதும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட சட்டப்பேரவை தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கையை கவனிக்க தேவைப்படும் இடங்களில் ஐஏஎஸ் அல்லது மாநில அதிகாரிகளை தேர்தல் ஆணையம் கூடுதல் பார்வையாளர்களாக நியமிக்கும். இவ்வாறு அவர தெரிவித்தார்.

The post தமிழகத்தில் மொத்தமுள்ள 39 மையங்களில் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அலுவலர்களுக்கு அடுத்த வாரம் பயிற்சி: தலைமை தேர்தல் அதிகாரி தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chief Electoral Officer ,CHENNAI ,Sathyaprada Saku ,
× RELATED தபால் ஓட்டுகளின் முடிவை முதலில்...