×

சின்னசேலம் பகுதியில் மக்காசோளம் உள்ளிட்ட பயிர்கள் வறட்சியிலிருந்து மீண்டது

சின்னசேலம், மே 17: சின்னசேலம் வட்டார பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு நல்ல மழை பெய்ததால் விவசாயிகள் பயிரிட்டுள்ள கரும்பு, மக்காச்சோளம், மரவள்ளி தப்பியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் தென்மேற்கு வங்க கடல் மற்றும் தெற்கு இலங்கை கடலோர பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலையை கொண்டுள்ளது. அதன் காரணமாக தமிழ் நாட்டில் 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக 16, 17ம் தேதிகளில் மஞ்சள் அலர்ட்டும், 18, 19ம் தேதிகளில் ஆரஞ்சு அலர்ட்டும் விடப்பட்டுள்ளது. மேலும் வெப்பத்தின் தாக்கமும் ஓரளவு குறைந்துள்ளது. இந்நிலையில் சின்னசேலம் சுற்று வட்டார பகுதியில் 15ம் தேதி இரவு முதல் 16ம் தேதி காலை வரை தொடர்ந்து காற்றுடன் கூடிய மழை பெய்தது.

குறிப்பாக சின்னசேலம் வட்டார பகுதியில் உள்ள கிராமங்களில் நல்ல மழை பெய்தது. இதனால் கச்சிராயபாளையம் பகுதியில் 33மி.மீ மழையும், கோமுகி அணை பகுதியில் 42மி.மீ மழையும் பெய்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 103மி.மீ மழை பெய்துள்ள நிலையில் அதில் சின்னசேலம் வட்டார பகுதியில் மட்டும் 75மி.மீ மழை விடிய விடிய தொடந்து பெய்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் சொல்லும்படியான மழை இல்லை. சின்னசேலம் வட்டார பகுதி விவசாயிகள் அதிகளவில் கரும்பு, மரவள்ளி, மக்காச்சோளம் பயிர்கள் நட்டு இருந்தனர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு நிலவிய கடும் வெப்பத்தால் பயிர்கள் வாடி வதங்கியது. இன்னும் ஒரு வாரம் தொடர்ந்து வெப்பம் நீடித்திருந்தால் பயிர்கள் காய்ந்து சருகாகி இருக்கும். இந்நிலையில் நேற்றுமுன்தினம் பெய்த தொடர் மழையால் கரும்பு, மரவள்ளி, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் தப்பியது. இதனால் சின்னசேலம் வட்டார விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post சின்னசேலம் பகுதியில் மக்காசோளம் உள்ளிட்ட பயிர்கள் வறட்சியிலிருந்து மீண்டது appeared first on Dinakaran.

Tags : Chinnasalem ,Tamil Nadu ,south-west Bengal Sea ,southern Sri Lankan ,Dinakaran ,
× RELATED மனைவியை கொன்று புதைத்து கணவன் தூக்கிட்டு தற்கொலை