×

சென்னையில் சாலையோர நடைபாதைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி வழக்கு: மாநகராட்சி பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னை மாநகர சாலையோரங்களில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புக்களை அகற்றக் கோரிய மனுவுக்கு பதிலளிக்குமாறு தமிழக அரசு, சென்னை மாவட்ட கலெக்டர், போலீஸ் கமிஷனர், மாநகராட்சி கமிஷனர் உள்ளிட்டோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாலை விபத்துக்களில் பலியாகும் 10 பேரில் ஒன்பது பேர் பாதசாரிகள் என்று ஆய்வுகள் கூறியுள்ளதால், பாதசாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாக அரசுக்கு அளித்த விண்ணப்பத்தை பரிசீலிக்க உத்தரவிடக் கோரி சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த தேவதாஸ் காந்தி வில்சன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பல இடங்களில் தடுப்புக்களை ஏற்படுத்தியுள்ளனர். இந்நிலையில், பாதசாரிகளின் பாதுகாப்பை பற்றி கவலை கொள்ளாமல் இருசக்கரவாகன ஓட்டிகள் அதிகவேகத்தில் வாகனங்களை இயக்குகிறார்கள். பாதசாரிகள் பயன்பாட்டுக்கான நடைபாதைகளை ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டுள்ளன. நடைபாதைகளில் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.
மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதால் பேருந்து நிறுத்தங்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.

பெரும்பாலான இடங்களில் பேருந்து நிறுத்தங்களில் மேற்கூரைகள் இல்லை. எனவே, பாதசாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சென்னை மாநகரில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் மேற்கூரை அமைக்கக் கோரியும், நடைபாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்றக் கோரியும் கடந்த 8ம் தேதி அரசுக்கு அனுப்பிய விண்ணப்பத்தை பரிசீலிக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.டி.ஆஷா மற்றும் என்.செந்தில் குமார் ஆகியோர், இந்த மனுவுக்கு பதிலளிக்குமாறு தமிழக அரசு, சென்னை மாவட்ட கலெக்டர், போலீஸ் கமிஷனர், சென்னை மாநகராட்சி கமிஷனர் ஆகியோருக்கு உத்தரவிட்டு விசாரணையை, வரும் 29ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

The post சென்னையில் சாலையோர நடைபாதைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி வழக்கு: மாநகராட்சி பதில் தர ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai High Court ,Tamil Nadu Government ,Chennai District Collector ,Dinakaran ,
× RELATED எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞர் பலி!...