×

தெற்காசியாவில் முதன்முறையாக கருப்பை புற்றுநோய்க்கு ரோபோடிக்ஸ் சைட்டோரிடக்டிவ் அறுவை சிகிச்சை: அப்போலோ மருத்துவமனை சாதனை

சென்னை: தெற்காசியாவில் முதல்முறையாக கருப்பை புற்றுநோய்க்கு ரோபோடிக்ஸ் சைட்டோரிடக்டிவ் அறுவை சிகிச்சை செய்து அப்போலோ மருத்துவமனை சாதனை படைத்துள்ளது. கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கவுஹாத்தியை சேர்ந்த 48 வயது பெண் மற்றும் சென்னையை சேர்ந்த 40 வயது பெண்ணுக்கு குறைவான பக்கவிளைவு பாதிப்புகளுடன், ரோபோடிக்ஸ் சைட்டோரிடக்டிவ் அறுவை சிகிச்சையை (சிஆர்எஸ்) சென்னை அப்போலோ மருத்துவமனை புற்றுநோய் மையம் வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது.

இதுதொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு தரமணியில் உள்ள அப்போலோ புற்றுநோய் மையத்தில் நேற்று நடந்தது. இதில், புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் வெங்கட், பிரியா கபூர் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது: கவுஹாத்தியை சேர்ந்த 48 வயது பெண், கருப்பை புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு கீமோதெரபியின் 3 சுழற்சிகளை பெற்றதற்கு பிறகு புற்றுநோய் கணிசமாக குறைக்கப்பட்டது. இதையடுத்து, ரோபோட்டிக் உதவியுடன் சைட்டோரிடெக்டிவ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

விரிவான பல தொடர் அறுவை சிகிச்சை, இடையீட்டு நடவடிக்கைகள் இந்த மருத்துவ செயல்முறைகளில் இடம்பெற்றிருந்தன.  மேலும், கருப்பை புற்றுநோய்க்கான சிகிச்சையை பெறுகின்ற காலத்தின்போது மார்பக புற்றுநோயும் இவருக்கு இருப்பது கண்டறியப்பட்டது. எனவே, கருப்பை புற்றுநோய்க்கான சிகிச்சை அமர்விலேயே, மார்பக புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சையும் இவருக்கு மேற்கொள்ளப்பட்டது.

மிகக் குறைவான பக்கவிளைவு பாதிப்புகளுடன் இந்த இரு அறுவை சிகிச்சைகளும் ரோபோட்டிக் மூலம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து 3 நாட்களில் இந்நோயாளி மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதேபோல், சென்னையை சேர்ந்த 40 வயது பெண்ணுக்கு கருப்பையில் அரிதான புற்றுநோய்க்கட்டி உருவானதையடுத்து, அதற்கான சிகிச்சையை இங்கு பெறுவதற்காக வந்தார். இவருக்கும் அதேபோல விரிவான சைட்டோரிடக்டிவ் அறுவை சிகிச்சை ரோபோடிக் உதவியுடன் செய்யப்பட்டது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பல்வேறு திசுக்களும், உறுப்புகளும் இந்த சிகிச்சையில் அகற்றப்பட்டன. துல்லியத்தையும், நெகிழ்வுத் திறனையும் வழங்குகின்ற மிக நவீன ரோபோட்டிக் சாதனங்களை இந்த முற்றிய கருப்பை புற்றுநோய்க்கான 2 அறுவை சிகிச்சையில் பயன்படுத்தினோம். ரோபோட்டிக் அறுவை சிகிச்சை நோயாளிகளுக்கு, குறைவான ஊடுருவல் உள்ள மருத்துவ செயல்முறைகள் மற்றும் அதிகரிக்கப்பட்ட வெப்ப நிலையில் புற்றுக்கட்டி பரவல் உள்ள இடத்திற்கே நேரடியாக இலக்கை நோக்கிய கீமோதெரபி வழங்கல் ஆகியவற்றின் பலன்கள் கிடைகிறது.

திறந்தநிலை அறுவை சிகிச்சை உடன் தொடர்புடைய வழக்கமான சிக்கல்களை குறைக்கும் அதே வேளையில், சிகிச்சையின் பயனளிக்கும் திறனை இந்த அணுகுமுறை கணிசமாக மேம்படுத்துகிறது. தெற்காசியாவில் முதன்முறையாக இந்த சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

The post தெற்காசியாவில் முதன்முறையாக கருப்பை புற்றுநோய்க்கு ரோபோடிக்ஸ் சைட்டோரிடக்டிவ் அறுவை சிகிச்சை: அப்போலோ மருத்துவமனை சாதனை appeared first on Dinakaran.

Tags : South Asia ,Apollo Hospital ,Chennai ,Guwahati ,