×

லண்டனில் நடக்கும் நிகழ்ச்சிக்கு நேர்காணல் என வரவழைத்து மாடலிங் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு

* மயிலாப்பூர் நட்சத்திர ஓட்டலில் பரபரப்பு, தப்பி ஓடிய வாலிபருக்கு போலீஸ் வலை

சென்னை: லண்டனில் நடக்கும் மாடலிங் நிகழ்ச்சிக்கு நேர்முக தேர்வு செய்வதாக கேரளாவை சேர்ந்த மாடலிங் இளம் பெண்ணை நட்சத்திர ஓட்டலுக்கு வரவழைத்து பாலியல் தொந்தரவு செய்த வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். கேரள மாநிலம் கொச்சின் பகுதியை சேர்ந்தவர் ஜான்சி(28, பெயர்மாற்றப்பட்டுள்ளது). இவர், மாடலிங் வேலை செய்து வருகிறார். ஜான்சிக்கு ஏற்கனவே மாடலிங் நிகழ்ச்சிக்கு நேர்காணல் நடத்திய கார்த்திக் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கத்தில் கார்த்திக், மாடலிங் பெண் ஜான்சியிடம் செல்போன் எண்ணை வாங்கி வைத்திருந்தார். இதற்கிடையே ஜான்சிக்கு கடந்த 12ம் தேதி கார்த்திக் போன் செய்து, இங்கிலாந்து தலைநகர் லண்டனில் பெரிய அளவில் மாடலிங் போட்டி நடக்கிறது. இந்த போட்டிக்கு உன்னை நான் பரிந்துரை செய்ய உள்ளேன். எனவே இந்த போட்டியில் பங்கேற்க வேண்டும் என்றால், நேர்முக தேர்வில் நீ கலந்துகொள்ள விருப்பமா, என்று கேட்டுள்ளார்.

அதற்கு ஜான்சி, இது எனது வாழ்நாள் கனவு என்றும், நான் மாடலிங் நேர்காணலில் கலந்து கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார். அதன்படி கார்த்திக், ஜான்சியை நேற்று முன்தினம் சென்னை வரவழைத்துள்ளார். பின்னர், மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலுக்கு அழைத்துள்ளார். அதன்படி ஜான்சி, கார்த்திக் கூறிய நட்சத்திர ஓட்டலுக்கு வந்துள்ளார். பின்னர், கார்த்திக்கை தொடர்பு கொண்டு, எங்கு வர வேண்டும் என்று கேட்டுள்ளார்.

அதற்கு அவர், ஓட்டலில் உள்ள அறை எண்.323க்கு வா, என்று கூறியுள்ளார். அதன்படி ஜான்சி அறைக்கு சென்றதும், அங்கு நேர்காணல் செய்ய யாரும் இல்லை. இதுபற்றி கார்த்திக்கிடம் கேட்டபோது, நேர்காணல் செய்யும் நபர்கள் இனிமேல் தான் வருவார்கள். அதுவரை காத்திருக்க வேண்டும், என கூறிவிட்டு, மாடலிங் தொடர்பாக சிறிது நேரம் பேசியுள்ளார். பின்னர், திடீரென ஜான்சிக்கு பாலுணர்வை தூண்டும் வகையில் பேசி, கட்டி அணைத்து, முத்தம் கொடுத்து, பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.

இதை சற்றும் எதிர்பார்க்காத ஜான்சி, கார்த்திக்கிடம் இருந்து தப்பி, ஓட்டலை விட்டு வெளியே வந்துள்ளார். பிறகு நடந்த சம்பவத்தை சென்னையில் உள்ள தனது நண்பர்களுக்கு தெரிவித்தார். அவர்கள் கொடுத்த ஆலோசனைப்படி, நேர்காணலுக்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுத்த கார்த்திக் மீது ராயப்பேட்டை காவல் நிலையத்தில் இரவு புகார் அளித்தார்.

அதன்பேரில், போலீசார் சம்பவம் நடந்த நட்சத்திர ஓட்டலுக்கு சென்று சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, மாடலிங் பெண் ஜான்சியை, கார்த்திக் அறைக்கு அழைத்து செல்லும் காட்சி மற்றும் அவர் பதற்றத்துடன் வெளியே ஓடி வரும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அதைதெடர்ந்து ராயப்பேட்டை போலீசார் கார்த்திக் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். கேரள இளம்பெண் ஒருவரை நட்சத்திர ஓட்டலுக்கு வரவழைத்து நேர்காணல் என்ற பெயரில் பாலியல் தொந்தரவு செய்த சம்பவம் மாடலிங் பெண்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post லண்டனில் நடக்கும் நிகழ்ச்சிக்கு நேர்காணல் என வரவழைத்து மாடலிங் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு appeared first on Dinakaran.

Tags : London ,Mylapore ,Chennai ,Kerala ,
× RELATED புளூ டிக் குறியீட்டில்...