×

ஆன்லைன் ரம்மியில் பணம் இழந்த மருத்துவ மாணவன் தற்கொலை

தண்டையார்பேட்டை: ஆன்லைன் ரம்மியில் அதிக பணத்தை இழந்ததால் கொருக்குப்பேட்டையில் மருத்துவ மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொருக்குப்பேட்டை ஜே.ஜே.நகரை சேர்ந்தவர் முனுசாமி. லாரி டிங்கரிங் வேலை செய்து வருகிறார். இவரது மகன் தனுஷ் (23), தனியார் மருத்துவ கல்லூரியில் 3ம் ஆண்டு பிசியோதெரபி படித்து வந்தார். இவர் கடந்த சில மாதங்களாகவே ஆன்லைன் ரம்மி விளையாடி வந்துள்ளார்.

இதில், தனுஷ் அதிக பணத்தை இழந்ததாக தெரிகிறது. மேலும் தொடர்ந்து விளையாடுவதற்கு பணம் இல்லாததால் நேற்று முன்தினம் தனது தந்தையிடம் ரூ.24 ஆயிரம் கேட்டுள்ளார். அதற்கு தந்தை என்னிடம் அவ்வளவு பணம் இல்லை, ரூ.4 ஆயிரம் மட்டும்தான் உள்ளது என்று கூறி, அந்த பணத்தை ஆன்லைன் மூலம் தனுசுக்கு பரிமாற்றம் செய்தார். அந்த பணத்தை வாங்கிக் கொண்டு வீட்டில் உள்ள அறைக்குச் சென்ற தனுஷ், அதன்பிறகு வெகு நேரம் ஆகியும் வெளியே வராததால், வீட்டில் உள்ளவர்கள் கதவைத் தட்டினர்.

ஆனால் அவர் கதவை திறக்காததால், சந்தேகமடைந்த அவரது தந்தை ஆர்.கே.நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.  அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, தனுஷ் மின்விசிறியில் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் கொருக்குப்பேட்டை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தடை விதித்தாலும் தொடர்ந்து இதுபோல் உயிரிழப்பு சம்பவங்கள் நடக்கத்தான் செய்கின்றன. இதற்கு ஒன்றிய அரசு தரப்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

The post ஆன்லைன் ரம்மியில் பணம் இழந்த மருத்துவ மாணவன் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Thandaiyarpet ,Korukuppet ,Munusamy ,JJ Nagar ,Larry ,Dhanush ,
× RELATED வாகன சோதனையின்போது உரிய ஆவணமில்லாத ரூ.15 லட்சம் பறிமுதல்