மும்பை: ஐபிஎல் டி20 போட்டியின் 67வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-லக்னோ எஸ்ஜி அணிகள் மோதுகின்றன. இந்த 2 அணிகளுக்கும் இது கடைசி லீக் ஆட்டம். ஹர்திக் பாண்டே தலைமையிலான மும்பை அணி ஏற்கனவே விளையாடிய 13 ஆட்டங்களில் 4 வெற்றி, 9 தோல்வி என 8 புள்ளிகளை மட்டுமே பெற்று கடைசி இடத்தில் உள்ளது. இந்த ஆட்டத்தில் வென்றாலும் கடைசி இடம் மாறும் வாய்ப்பு குறைவு. ஆனாலும் புள்ளிக் கணக்கை உயர்த்தவும், ஆறுதல் வெற்றிக்காகவும் மும்பை ஏதாவது அதிசயம் நிகழ்த்த பார்க்கும்.
அப்படி அதிசயம் நிகழ்ந்தால், அது கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ அணிக்கு அரிதிலும் அரிதான பிளே ஆப் வாய்ப்புக்கு வேட்டு வைத்து விடும். அந்த அணி 13 ஆட்டங்களில் 6வெற்றி, 7தோல்விகளுடன் 12 புள்ளிகளை பெற்று 7வது இடத்தில் உள்ளது. ஒருவேளை இந்த ஆட்டத்தில் லக்னோ வென்று, எஞ்சிய ஆட்டத்தில் சென்னை, ஐதராபாத், டெல்லி, பெங்களூர் அணிகள் தோற்றால் லக்னோ தொடர்ந்து 3வது முறையாக ஹாட்ரிக் பிளே ஆப் வாய்ப்பை பெறும். அதற்கு மிக அதிக வித்தியாசத்தில் லக்னோ வெற்றி பெற வேண்டும்.
ஆனால் ஹாட்ரிக் தோல்வியுடன் இருக்கும் லக்னோவுக்கு இன்றைய வெற்றி ஆறுதல் வெற்றியாக அமையக் கூடும். ஒருவேளை மும்பை வென்றாலும், லக்னோவும் லீக் சுற்றுடன் உடனே வெளியேறும். கூடவே 2022ல் அறிமுகமான லக்னோ அணி முதல் முறையாக பிளே ஆப் வாய்ப்பை இழக்கும். என்ன நடந்தாலும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தொடரில், இந்த 2 அணிகளிலும் ஏராளமான மாற்றங்கள் நிச்சயம். அதற்கு முன்னோட்டமாக அமைய உள்ள இன்றைய ஆட்டம் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் இருக்கும்.
நேருக்கு நேர்
* இந்த அணிகள் மோதிய 5 ஆட்டங்களில் லக்னோ 4 ஆட்டங்களிலும், மும்பை ஒரு ஆட்டத்திலும் வென்றுள்ளன.
* நடப்புத் தொடரில் ஏப்.30ம் தேதி லக்னோவில் நடந்த 48வது லீக் ஆட்டத்தில் லக்னோ 4 விக்கெட் வி்த்தியாசத்தில் வென்றுள்ளது.
* இவ்விரு அணிகள் மோதிய ஆட்டங்களில் அதிகபட்சமாக லக்னோ 199, மும்பை 182ரன் விளாசி இருக்கின்றன. கூடவே குறைந்தபட்சமாக மும்பை 132, லக்னோ 101ரன்னும் எடுத்துள்ளன.
The post யார் வென்றாலும் இன்று லக்னோவுடன் வெளியேறும் மும்பை appeared first on Dinakaran.