×

வரும் 20ம் தேதி 5ம் கட்ட வாக்குப்பதிவு; நாளை மறுநாள் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.! 49 எம்பி பதவிக்கு 695 பேர் போட்டி

புதுடெல்லி: வரும் 20ம் தேதி 5ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், நாளை மறுநாள் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. ெமாத்தம் 49 பதவிக்கு 695 பேர் போட்டியிட்டுள்ளனர். நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் நான்கு கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் சூரத் மக்களவை தொகுதிக்கு பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அதனால் 542 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. இதுவரை நான்கு கட்டங்களையும் சேர்த்து 379 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. நான்கு கட்ட வாக்குப்பதிவுகள் முறையே 66.14 சதவீதம், 66.71 சதவீதம், 65.68 சதவீதம், 67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்நிலையில், 5ம் கட்ட வாக்குப்பதிவு வரும் 20ம் தேதி நடைபெற உள்ளது. பீகாரில் 5 தொகுதிகள், ஜம்மு – காஷ்மீரில் ஒரு தொகுதி, லடாக் தொகுதி, ஜார்கண்டில் 3 தொகுதிகள், மகாராஷ்டிராவில் 13 தொகுதிகள், ஒடிசாவில் 5 தொகுதிகள், உத்தரபிரதேசத்தில் 14 தொகுதிகள், மேற்குவங்கத்தில் 7 தொகுதிகள் என 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 49 தொகுதிகளில் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இத்துடன் ஒடிசா மாநிலத்தில் 35 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. நட்சத்திர வேட்பாளர்கள் பட்டியலில், உத்தரபிரதேசத்தின் அமேதி தொகுதியில் ஒன்றிய பாஜக அமைச்சர் ஸ்மிருதி இரானி – காங்கிரசின் கே.எல்.சர்மா இடையே போட்டி நிலவுகிறது.

வயநாடு தொகுதியில் போட்டியிட்டுள்ள ராகுல் காந்தி, 2வது தொகுதியாக ரேபரேலியிலும் போட்டியிட்டுள்ளார். லக்னோவில் ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பீகாரில் லாலு பிரசாத் யாதவின் மகள் ரோகினி ஆச்சார்யா, மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் மகன் காந்த் ஷிண்டே, மும்பை வடக்கில் ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். மேற்கண்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், 49 தொகுதிகளிலும் 695 பேர் போட்டியிட்டுள்ளனர். நாளை மறுநாள் மாலையுடன் (மே 18) தேர்தல் பிரசாரம் ஓய்வதால் தலைமை தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை முடுக்கிவிட்டுள்ளது.

The post வரும் 20ம் தேதி 5ம் கட்ட வாக்குப்பதிவு; நாளை மறுநாள் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.! 49 எம்பி பதவிக்கு 695 பேர் போட்டி appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Matam ,Lok Sabha ,Dinakaran ,
× RELATED புதிய எம்.பி.க்களை வரவேற்க தயார்: மக்களவை செயலகம் அறிவிப்பு