×

தொட்டபெட்டா செல்ல திடீர் தடை; சுற்றுலா பயணிகள் கடும் ஏமாற்றம்

ஊட்டி: ஊட்டி தொட்டபெட்டா சிகரத்திற்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் ஊட்டி- கோத்தகிரியில் உள்ள தொட்டபெட்டாவை காண சுற்றுலா பயணிகள் அதிகமாக வருகின்றனர். இங்குள்ள, தொலைநோக்கி மூலம் ஊட்டி நகரையும், அவலாஞ்சி, வேலிவியூ பள்ளத்தாக்கு, குன்னூர் மற்றும் இயற்கை காட்சிகளையும் பார்த்து ரசிக்கின்றனர். இந்த சிகரத்திற்கு செல்ல கோத்தகிரி சாலையில் இருந்து 3 கி.மீ, தூரத்திற்கு வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சாலை வழியாக பயணிக்க வேண்டும். நுழைவுவாயில் பகுதியில் வனத்துறை சார்பில் சூழல் சுற்றுலா மூலம் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

கடந்தாண்டு ஜூன் மாதத்தில் இருந்து தொட்டபெட்டா சிகரம் செல்வதற்கான வாகன நுழைவு கட்டணம் வசூல் செய்ய பாஸ்ட் டேக் மின்னணு பரிவர்த்தனை தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த ஓராண்டாக இம்முறை கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், சீசன் சமயங்களில் நுழைவு கட்டணம் செலுத்தி செல்வதற்காக ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நிற்கும். இதனால் ஊட்டி- கோத்தகிரி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவந்தது. இதன்காரணமாக சுற்றுலா பயணிகள் அவதியடைந்தனர். இதையடுத்து தொட்டபெட்டா சிகரத்திற்கு செல்ல நுழைவு கட்டணம் வசூலிக்கும் இடத்தை வேறு இடத்திற்கு மாற்ற வனத்துறை நடவடிக்கை எடுத்தது. நுழைவு வாயில் பகுதியில் இருந்து சிகரத்திற்கு செல்லக்கூடிய சாலையில் பாஸ்ட்டேக் நுழைவு கட்டண வசூல் மையம் அமைக்கப்பட உள்ளது.

இப்பணிகள் இன்று துவங்க உள்ள நிலையில் வரும் 22ம் ேததி வரை 7 நாட்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதியில்லை என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘’தொட்டபெட்டா சிகரத்திற்கு செல்லும் சாலை நுழைவு வாயில் பகுதியில் உள்ள பாஸ்ட் டேக் சோதனை சாவடியை போக்குவரத்து நெரிசல்களை தவிர்க்கும் பொருட்டு மாற்றியமைக்கும் பணிகள் நடைபெறுவதால் 16ம்தேதி முதல் 22ம் தேதி வரை தொட்டபெட்டா சிகரத்திற்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதியில்லை’’ என்றனர்.

The post தொட்டபெட்டா செல்ல திடீர் தடை; சுற்றுலா பயணிகள் கடும் ஏமாற்றம் appeared first on Dinakaran.

Tags : Ooty ,Thottapetta ,Ooty-Kothagiri, ,Nilgiris district ,Avalanchi ,Valleyview valley ,Thottapeta ,Dinakaran ,
× RELATED தொட்டபெட்டா சிகரத்திற்கு இன்று முதல் அனுமதி