- திருமலா
- மேற்கு கோதாவரி மாவட்டம், மேற்கு கோதாவரி மாவட்டம்
- நம்பபாளையம் தெற்கு ஊராட்சி, மேலம்வரிமேரக
- பாலாபிஷேகம்
திருமலை: வீட்டின் முன்பு இறந்து போன பாம்பிற்கு அப்பகுதி மக்கள் பாலாபிஷேகம் செய்து, மஞ்சள், குங்குமம் வைத்து சிறப்பு பூஜை நடத்தி இறுதி சடங்கு செய்தனர். ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் நாமபாளையம் தெற்கு ஊராட்சிக்கு உட்பட்டது மேலம்வாரிமேரகா கிராமம். இந்த கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கிராமத்தைச் சுற்றி முள்புதர்கள் இருப்பதால் அங்கு கொடிய விஷமுள்ள பாம்புகள் மற்றும் விஷப்பூச்சிகள் நடமாட்டம் அதிகம் இருக்குமாம். சில நேரங்களில் வீடுகளிலும் புகுந்து விடுமாம். இதனால் அப்பகுதி மக்கள் தினமும் அச்சத்துடனே வாழ வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில் நேற்று மாலை தெருவில் நடந்து சென்ற சிலர், ஒரு வீட்டின் முன்பு பாம்பு படுத்துக்கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டபடியே சிதறி ஓடினர்.
இவர்களது சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் விரைந்து வந்தனர். அவர்களும் பாம்பை பார்த்து நடுங்கினர். ஆனால் அந்த பாம்பு ஒரே இடத்தில் நீண்ட நேரம் படுத்தபடி இருந்ததால் சந்தேகம் அடைந்த சிலர் அருகே சென்று பார்த்தனர். அப்போது அந்த பாம்பு சிறிது நேரத்திற்கு முன்பு இறந்து கிடந்ததும், அது நாகப்பாம்பு என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் இறந்த பாம்பை நாகதேவதையாக கருதி பாலாபிஷேகம் செய்து மஞ்சள், குங்குமம் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். பின்னர் மேளதாளத்துடன் ஊர்வலமாக கொண்டு சென்று ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் இறுதி சடங்கு செய்து அடக்கம் செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
The post வீட்டின் முன் இறந்த பாம்புக்கு இறுதி சடங்கு செய்த மக்கள்: பாலாபிஷேகம், மஞ்சள், குங்குமம் வைத்து வழிபாடு appeared first on Dinakaran.