×

மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதார நலனை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை

சென்னை: மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதார நலனை பாதுகாக்க தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; நெல்லை மாவட்டம் மாஞ்சோலையில், பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் (பிபிடிசிஎல்) 99 ஆண்டு குத்தகை காலம் 2028ல் முடிவடைய உள்ளதால், நான்கு தலைமுறை தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் அங்குள்ள குடியிருப்பாளர்கள் மலைப்பகுதியில் இருந்து விரைவில் வெளியேற்றப்படுவார்கள் என செய்திகள் வெளியாகியுள்ளன.

மாஞ்சோலை தோட்டத்தில் மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரை வெட்டி என 5 தேயிலை தோட்டங்கள் உள்ளன. மொத்தமாக இங்கு சுமார் 700 குடும்பங்கள் வரை வசிக்கின்றன. இந்த குடும்பங்களில் பெரும்பாலானோருக்கு தேயிலை தோட்டத் தொழிலே வாழ்வாதாரமாக உள்ளன. தற்போது சுமார் 2,150 பேர் தேயிலை தோட்டத் தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். மாஞ்சோலையில் பிபிடிசிஎல் தனியார் நிறுவனத்தின் 99 ஆண்டு குத்தகைக் காலம் விரைவில் முடிவடைய உள்ளதால் அந்நிறுவனம் மாஞ்சோலையில் இருந்து தனது தொழிலை முடித்துக்கொள்ளும் பணியை துவங்கியுள்ளது.

இதனால் மாஞ்சோலை தோட்ட பகுதியில் உள்ள தொழிலாளர்களும் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே மாஞ்சோலை பகுதி தமிழ்நாடு வனத்துறை சட்டம் 1882 பிரிவு 16 இன் கீழ் காப்பு காடாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாஞ்சோலை தோட்ட பகுதி மக்களின் வாழ்வாதாரமும், இருப்பிடமும் கேள்விக்குறியாகி உள்ளது. பிபிடிசிஎல் நிறுவனத்தின் குத்தகை காலம் முடிவடைந்த பிறகு, அங்குள்ள தொழிலாளர்களின் நலனை காக்கும் வகையில், தேயிலைத் தோட்டத்தை மாநில அரசு கையகப்படுத்தி, தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வேலை வழங்க வேண்டும் என்பதே தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கையாக உள்ளது.

ஆகவே, தமிழக அரசு, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், வால்பாறை தேயிலை தோட்டங்களை போன்று மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை கையகப்படுத்தி, தமிழ்நாடு தேயிலை தோட்டக்கழகம் (டான் டீ) மூலமாக தொடர்ந்து தேயிலை உற்பத்தியை மேற்கொண்டு நான்கு தலைமுறை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். தொழிலாளர்களுக்காக கூட்டுறவு சங்கம் உருவாக்கி, அவர்களின் வேலைக்கேற்ப ஊதியத்தை மாநில அரசே வழங்க வேண்டும். அனைத்து உரிமைகளும், பணப்பலன்களும் மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

காப்புக் காடுகளுக்காக மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை மூடும் பட்சத்தில், தற்போதுள்ள மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரத்தை உறுதி செய்வதோடு, வெளியூர்களில் அவர்களுக்கு இலவச பட்டா நிலம் வழங்கி அவர்களுக்கான இருப்பிடத்தை உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன். மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதார நலனை பாதுகாக்க எஸ்டிபிஐ கட்சி குரல் கொடுப்பதோடு, அவர்களோடு இணைந்து களத்தில் போராடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

The post மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதார நலனை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Govt ,Mancholai ,STBI party ,CHENNAI ,Tamil Nadu government ,State President ,STPI Party ,Nellie Mubarak ,Dinakaran ,
× RELATED மாஞ்சோலை தேயிலை தோட்ட பிரச்னை...