×

திருமயம் அருகே பரபரப்பு: காரில் கடத்தப்பட்ட இளம்பெண் வாகன சோதனையில் மீட்பு

திருமயம். மே 16: அரிமளத்தில் காரில் கடத்தப்பட்ட இளம் பெண் தொண்டி அருகே வாகன சோதனையில் மீட்கப்பட்டார். புதுக்கோட்டை மாவட்டம் சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி மகள் ரம்யா (21) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) . இவர் அரிமளத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி புதுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணி செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் பணியை முடித்துவிட்டு புதுக்கோட்டையில் இருந்து பஸ்ஸில் வந்த ரம்யா அரிமளம் எட்டாம் மண்டகப்படி பஸ் ஸ்டாப்பில் இறங்கி ராயவரம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் காரில் வந்த மர்ம நபர்கள் ரம்யாவை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி சென்றதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து உறவினர்கள் அரிமளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த அரிமளம் போலீசார் அரிமளத்தில் இருந்து ராயவரம், மேல்நிலைப்பட்டி செல்லும் சாலைகளில் விரைந்து சென்று கடத்தல் காரை தேடினர். ஆனால் காரில் ரம்யாவை கடத்தி சென்ற நபர்கள் தப்பி ஓடிய நிலையில் போலீசார் சுற்றுவட்டார காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இந்நிலையில் நேற்று ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பகுதியில் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக வந்த காரை மறித்து சோதனை செய்த போது அரிமளத்தில் கடத்தப்பட்ட ரம்யா காரில் இருந்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து தொண்டி போலீசார் அரிமளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற அரிமளம் போலீசார் ரம்யாவை மீட்டு நடத்திய முதற்கட்ட விசாரணையில் ரம்யாவை அவரது உறவினர் மாரி என்பவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். அதேசமயம் மாரி அவரை திருமணம் செய்து கொள்ளுமாறு ரம்யாவை வற்புறுத்தியதாக தெரிகிறது. இதனிடையே ரம்யாவிற்கும் வேறொரு உறவினருக்கும் திருமணம் செய்ய பெற்றோர்கள் முடிவு செய்திருந்தனர். இதனை அறிந்த மாரி அரிமளத்தில் உறவினர் வீட்டில் ரம்யா இருப்பதை தெரிந்து கொண்டு அவரை நண்பர்களுடன் காரில் கடத்தியதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து அரிமளம் போலீசார் ரம்யாவின் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருமயம் அருகே பரபரப்பு: காரில் கடத்தப்பட்ட இளம்பெண் வாகன சோதனையில் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Arimala ,Thondi ,Palanichami ,Ramya ,Subramaniyapuram ,Pudukkottai District ,
× RELATED தொண்டி போலீஸ் ஸ்டேசனில் கூடுதல் போலீசார் நியமிக்க மக்கள் கோரிக்கை