×

ஜூன் 4க்கு பின் பிரதமராக மோடி இருக்கவே மாட்டார்: பாஜ வெளியிட்ட போலி வீடியோவை அம்பலபடுத்தி ராகுல் காந்தி உறுதி

புதுடெல்லி: உபியில் தனது பேச்சு தொடர்பான போலி வீடியோ குறித்த உண்மைகளை டிவிட்டரில் பகிர்ந்த ராகுல் காந்தி, ‘ஜூன் 4ம் தேதிக்குப் பிறகு பிரதமராக மோடி இருக்க மாட்டார்’ என கூறி உள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த 10ம் தேதி உபியின் கான்பூர் பொதுக்கூட்டத்தில் பேசிய வீடியோ ஒன்று சமீபத்தில் சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில், ஜூன் 4ம் தேதிக்குப்பிறகு மீண்டும் பிரதமராக மோடி வருவார் என்றும், உபியில் இந்தியா கூட்டணிக்கு ஒரு சீட் கூட கிடைக்காது என ராகுலே கூறுவது போல எடிட் செய்யப்பட்டிருந்தது. அந்த கூட்டத்தில் ராகுல் பேசிய உண்மையான வீடியோவை காங்கிரஸ் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது.

இந்த டிவிட்டை தனது டிவிட்டரில் பகிர்ந்த ராகுல் காந்தி, ‘‘பொய்களின் தொழிற்சாலை மூலம் பாஜ எவ்வளவுதான் தனக்குத்தானே ஆறுதல் கூறிக் கொண்டாலும், எந்த விஷயமும் மாறப் போவதில்லை. மீண்டும் சொல்கிறேன் ஜூன் 4ம் தேதிக்குப் பிறகு மோடி பிரதமராக முடியாது. நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் புயல் வீசிக் கொண்டிருக்கிறது’’ என குறிப்பிட்டுள்ளார். கான்பூர் கூட்டத்திலும் இதே கருத்தை கூறியிருந்த ராகுல், ‘ஜூன் 4ம் தேதிக்குப் பிறகு பிரதமராக மோடி இருக்க மாட்டார். உபியில் இந்தியா கூட்டணி 50 சீட்களில் வெற்றி பெறும்’ என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

* அரசியலமைப்பை அழிக்க விரும்பும் பாஜ
ஒடிசாவில் போலன்கிரியில் நேற்று நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, ‘‘அரசியலமைப்பு புத்தகத்தை கிழித்து அழிக்க பாஜ விரும்புகிறது. ஆனால் காங்கிரசில் உள்ள நாங்களும், இந்தியா கூட்டணி கட்சியினரும் அதை அனுமதிக்க மாட்டார்கள். பாஜ வெற்றி பெற்றால் இடஒதுக்கீடு ரத்து செய்யப்படும். பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படும். கடந்த 10 ஆண்டு ஆட்சியில் மோடி 22 தொழிலதிபர்களுக்காக மட்டுமே உழைத்துள்ளார். நாங்கள் கோடிக்கணக்கான லட்சாதிபதிகளை உருவாக்குவோம். விரைவில், நாட்டின் அனைத்து ஏழை குடும்பங்களின் பட்டியலை உருவாக்குவோம். அந்த குடும்பங்களில் உள்ள ஒரு பெண்ணுக்கு மாதம் தலா ரூ.8,500 வீதம் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும்’’ என்றார்.

The post ஜூன் 4க்கு பின் பிரதமராக மோடி இருக்கவே மாட்டார்: பாஜ வெளியிட்ட போலி வீடியோவை அம்பலபடுத்தி ராகுல் காந்தி உறுதி appeared first on Dinakaran.

Tags : Modi ,PM ,Rahul Gandhi ,BJP ,New Delhi ,UP ,Congress ,Dinakaran ,
× RELATED கோட்சேவை பின்பற்றுபவர்களுக்கு...