- பிரமோத்சவம்
- ரத்தினகிரி பாலமுருகன் கோவில்
- ஆர்க்காடு
- ஆண்டுதோறும்
- பிரம்மத்வம்
- ரனிபெட் மாவட்டம்
- அர்ஹத்
- ரத்னகிரி
- இந்து சமய அறநெறிகள் துறை
- 7வது பண்டா வீடு
- ரத்தினகிரி பாலமுருகன் கோவில் துவக்க விழா
ஆற்காடு: ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் 2ம் ஆண்டு பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த ரத்தினகிரியில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் 7ம் படை வீடு என்று பக்தர்களால் போற்றப்படும் பிரசித்தி பெற்ற பாலமுருகன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் 2ம் ஆண்டு பிரமோற்சவம் மற்றும் வைகாசி விசாகத் தேர்திருவிழா வரும் 25ம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்றது.
இந்நிலையில், பிரமோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. பாலமுருகனடிமை சுவாமிகள் கலந்து கொண்டு கொடிமரத்திற்கு சிறப்பு பூஜை செய்து மயில் கொடி ஏற்றி வைத்தார். இதில், கலவை சச்சிதானந்தா சுவாமிகள் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, மலையடிவாரத்தில் தங்க அங்கி அணிந்து தங்கவேல் மற்றும் சிறப்பு அலங்காரத்தில் வள்ளி தெய்வானை சமேதராக சுவாமி பாலமுருகன் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பின்னர், கேடய உலா உற்சவம், மாலை யாகசாலை பூஜை, நவசாந்தி பூஜை, பலிதானம், அன்னவாகனத்தில் புறப்பாடு நடைபெற்றது. முன்னதாக விக்னேஸ்வர பூஜையும், விநாயகர் உற்சவம், வெள்ளி மூஷிக வாகன உற்சவம் நடைபெற்றது. இன்று 2ம் நாள் காலை இந்திர விமானத்தில் புறப்பாடு, மாலை பூத வாகனம், (16ம் தேதி) 3ம் நாள் காலை சூரிய பிரபை, மாலை ஆட்டுக்கிடா வாகனம், (17ம் தேதி) 4ம் நாள் காலை நாக வாகனம், மாலை சந்திர பிரபை வாகன உற்சவங்கள் மற்றும் சுவாமி திருவீதி உலா நடைபெறுகிறது.
(18ம் தேதி) 5ம் நாள் காலை வெள்ளி ரிஷப வாகனம், மாலை பூப்பல்லக்கு, (19ம் தேதி) 6ம் நாள் காலை மான் வாகனம், மாலை மயூர வாகனம், (20ம் தேதி) 7ம் நாள் காலை மஞ்சம், இந்திர விமானம், மாலை கற்பக விருட்சம், (21ம் தேதி) 8ம் நாள் காலை மஞ்சம், இந்திர விமானம், மாலை திருக்கல்யாண உற்சவம், வெள்ளி யானை வாகன உற்சவம் மற்றும் சுவாமி திருவீதி உலா நடைபெறுகிறது. (22ம் தேதி) 9ம் நாள் விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் திருவிழாவும், மாலை தேர் தடம் பார்த்தல், கேடயம் புறப்பாடு மற்றும் திருவீதி உலா, (23ம் தேதி) 10ம் நாள் காலை சண்முக பெருமான் தரிசனக் காட்சி, மாலை வெள்ளி குதிரை உற்சவமும், (24ம் தேதி) 11ம் நாள் காலை மஞ்சம் இந்திர விமானத்தில் புறப்பாடு மாலை தீர்த்தவாரியும், துவஜ அவரோஹணம், (25ம் தேதி) 12ம் நாள் உற்சவ சாந்தி அபிஷேகம், நவவீரர்கள் உற்சவம், மாலை திருப்புகழ் அருணகிரிநாதர் குருபூஜை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர் பாலமுருகனடிமை சுவாமிகள், செயல் அலுவலர் சங்கர், தலைமை அர்ச்சகர் கே.எஸ்.பிரசாத் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
The post ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது: திரளான பக்தர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.