×

பெரியார் பஸ் ஸ்டாண்ட் வணிக வளாக கட்டிடத்தில் பொழுதுபோக்கு அரங்குகள் அமைக்க மாநகராட்சி முடிவு

* புதிய வரைபடம் அரசு ஒப்புதலுக்கு அனுப்பி வைப்பு
* எஸ்கலேட்டர் வசதி ஏற்படுத்தவும் திட்டம்

மதுரை: மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் கட்டப்பட்டுள்ள வணிக வளாகத்தில் பொழுதுபோக்கு அரங்குகள் அமைக்க முடிவு செய்யப்பட்டு, புதிய வரைபடம் அரசு ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக எஸ்கலேட்டர் வசதி ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மதுரை பெரியார் பேருந்து நிலைய பகுதியில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் ரூ.119 கோடியில் வணிக வளாக கட்டிடம் 474 கடைகளுடன் கட்டப்பட்டுள்ளன. இந்த கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கும், பணிபுரியும் பணியாளர்களுக்கும் வாகன நிறுத்த வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த கடைகளை ஏலம் விட்டால் மாநகராட்சிக்கு மாதந்தோறும் பல கோடி ரூபாய் வருவாய் மாநகராட்சிக்கு கிடைக்கும். இந்த கடைகள் திறப்பு விழாவிற்கு பிறகு ஒதுக்கீட்டில் பழைய பெரியார் பேருந்து நிலைய வியாபாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

மீதமுள்ள கடைகளை வெளிப்படையாக பொதுஏலம் விட மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. மதுரை பெரியார் பேருந்து நிலைய பேரங்காடியில் உள்ள கடைகள் மாநகரின் முக்கிய வர்த்தகப் பகுதியாக அமைந்துள்ளது. மேலும் அருகில் ரயில் நிலையம், பெரியார் பேருந்து நிலையம், மீனாட்சியம்மன் கோயில் உள்ளன. பெரியார் பேருந்து நிலையத்தை பொருத்தவரை மாநகர் பேருந்துகளே அதிகளவில் வந்து செல்லும். மேலும் உள்ளூர் மக்கள் வந்து செல்வார்கள். வெளியூர் பயணிகள், நகரத்தின் பிற பகுதிகளுக்கு செல்வதற்கு வருவார்கள். அவர்கள் கடைகளில் ஷாப்பிங் செய்ய வேண்டும். மேலும் மீனாட்சியம்மன் கோயிலுக்கு வருவோர் கடைகளுக்கு வர வேண்டும். பொதுமக்கள் அதிகளவில் வர வேண்டும் என்பதற்காக பொழுதுபோக்கு அம்சங்கள் அடங்கிய அரங்குகளை மேல்தளத்தில் அமைக்க மாநகராட்சி முடிவு செய்து வரைப்படம் தயாரித்து ஒப்புதல் கேட்டு அரசுக்கு அனுப்பி வைத்தது.

திரைப்படம் திரையிடக்கூடிய தியேட்டர்கள் மேல் தளத்தில் கொண்டு வந்தால் அதற்கு செல்வதற்கு என்ன வசதி செய்யப்பட்டுள்ளது என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை கேட்டு ஒப்புதல் வழங்கவில்லை. இந்நிலையில் வணிக வளாக கடைகளில் தரைத்தளத்தில் உள்ள கடைகளுக்கு மக்கள் அதிகம் வந்து செல்வதில் தடையில்லை. ஆனால் மேல்தளத்தில் பொழுதுபோக்கு அம்சங்கள் உடன் கூடிய அரங்குகள் அமைக்கும் போது, படிகளில் ஏறி மட்டுமே மக்கள் ஷாப்பிங் செய்ய வாய்ப்பு குறைவு. அதனால் அவர்களின் வசதியையும் கருதி மாடியில் உள்ள கடைகளுக்கு ஏறி ஷாப்பிங் செய்வதற்கு வசதியாக எஸ்கலேட்டர் வசதி செய்ய மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக புதிய வரைபடத்தை தயாரித்த மாநகராட்சி தமிழ்நாடு அரசிடம் ஒப்புதல் கேட்டு மீண்டும் அனுப்பி வைத்துள்ளது.

இது குறித்து தலைமை ெபாறியாளர் ரூபன்சுரேஷ் கூறுகையில், ‘மக்கள் பொழுதுபோக்கு மேல்தளத்தில் அரங்குகள் அமைக்க புதிய வரைபடம் தயாரித்து அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் மேல்தளத்திற்கு செல்ல வசதியாக எஸ்கலேட்டர் வசதி ஏற்படுத்த அனுமதி கோரப்பட்டுள்ளது. தற்போது அமலில் உள்ள தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக்கொள்ளப்பட்ட பின் இதற்கான பணிகள் முழுவீச்சல் துவங்கும்’ என்றார்.

The post பெரியார் பஸ் ஸ்டாண்ட் வணிக வளாக கட்டிடத்தில் பொழுதுபோக்கு அரங்குகள் அமைக்க மாநகராட்சி முடிவு appeared first on Dinakaran.

Tags : Periyar ,Madurai ,Madurai Periyar Bus Stand ,
× RELATED முல்லைப்பெரியாறில் கேரளா புதிய அணை...