×
Saravana Stores

பொய் தகவல்களை கூறி வாரிசு சான்று கோரி விண்ணப்பிப்போர் மீது குற்ற வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க சுற்றறிக்கை: தமிழக வருவாய் நிர்வாகத்துறை ஆணையருக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மாரண்ணன் என்பவர், தந்தையின் மரணத்துக்குப் பின் வாரிசுரிமை சான்று வழங்கக் கோரி மேட்டுப்பாளையம் தாசில்தாரருக்கு விண்ணப்பித்துள்ளார். இதுசம்பந்தமான விசாரணையில், மாரண்ணனின் தந்தை மாரண்ண கவுடருக்கு இரு மகள்கள், இரு மகன்கள் உள்ள நிலையில், தான் மட்டுமே வாரிசு எனக் கூறி மாரண்ணன் விண்ணப்பித்துள்ளதாகக் கூறி அதை நிராகரித்து தாசில்தாரர் உத்தரவு பிறப்பித்தார். இதை எதிர்த்து மாரண்ணன் தாக்கல் செய்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பொய் தகவல்களைக் கூறியும், உண்மையை மறைத்தும், வாரிசுரிமை சான்று கோரி விண்ணப்பிப்பது இந்திய தண்டனைச் சட்டப்படி குற்றம் என்று அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், பொய் தகவல்களைக் கூறி வாரிசுரிமை சான்று பெற்று, சொத்துகளை பெயர் மாற்றம் செய்வதால் மற்ற வாரிசுகளின் உரிமை பறிக்கப்படுகிறது. பொய் தகவல்களைக் கூறி வாரிசுரிமை சான்று கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு எதிராக குற்ற வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து வருவாய் துறை அதிகாரிகளுக்கும் 5 வாரங்களில் வருவாய் நிர்வாகத்துறை ஆணையர் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும். இதுபோல் குற்ற வழக்கு தொடராமல் உடந்தையாக செயல்படும் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கையும், குற்ற நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

The post பொய் தகவல்களை கூறி வாரிசு சான்று கோரி விண்ணப்பிப்போர் மீது குற்ற வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க சுற்றறிக்கை: தமிழக வருவாய் நிர்வாகத்துறை ஆணையருக்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : ICourt ,Tamil Nadu Revenue Administration Commissioner ,CHENNAI ,Mettupalayam, Coimbatore district ,Marannan ,Mettupalayam ,Maranna Gowder ,
× RELATED சட்ட விரோத குவாரிகள் தொடர்பாக புகார்...