×

பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல் வட தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்கு சிறப்புத் திட்டங்கள் தேவை

சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட டிவிட்டர் பதிவு: தமிழ்நாடு மற்றும் புதுவையில் நடைபெற்ற 11ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 91.17 சதவீத மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் தேர்ச்சி விகிதம் 0.24 சதவீதம் அதிகரித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த காலங்களைப் போலவும், நடப்பாண்டின் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளைப் போன்றும் 11ம் வகுப்பு தேர்ச்சி விகிதங்களிலும் வட மாவட்டங்கள்தான் கடைசி இடங்களைப் பிடித்துள்ளன. கடைசி 10 இடங்களைப் பிடித்த வேலூர், திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், திருவாரூர், கிருஷ்ணகிரி, இராணிப்பேட்டை, புதுக்கோட்டை ஆகிய அனைத்துமே வடக்கு மற்றும் காவிரி பாசன மாவட்டங்கள் ஆகும். அதேபோல், கடைசி 15 இடங்களை பிடித்தவற்றில் 13 மாவட்டங்கள் வடக்கு மற்றும் காவிரி பாசன மாவட்டங்கள் ஆகும். 35 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் இந்த நிலைமை இனியும் தொடரக்கூடாது. அதற்காக வட மாவட்டங்கள் மீதான பாராமுகத்தைக் கைவிட்டு, வடமாவட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், அப்பகுதிகளின் கல்வி வளர்ச்சிக்காகவும் சிறப்புத் திட்டங்களை செயல்படுத்துவதற்கு தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.

The post பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல் வட தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்கு சிறப்புத் திட்டங்கள் தேவை appeared first on Dinakaran.

Tags : BAMAK ,president ,Anbumani ,North Tamil Nadu ,CHENNAI ,Tamilnadu ,Puduvai ,BAMA ,
× RELATED மருத்துவக் கல்வி வணிகமயமாவதை...