சென்னை: அரசுப் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: சென்னையை ஒட்டிய புறநகர் பகுதிகளில் சாதாரண பேருந்துகளில் ஒரு கிலோ மீட்டருக்கு 58 பைசா மட்டுமே தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகத்தால் வசூலிக்கப்பட வேண்டும். ஆனால், இதையும் தாண்டி 75 பைசா பயணிகளிடமிருந்து வசூலிக்கப்படுகிறது. ஒரு கிலோ மீட்டருக்கு 75 பைசா என்கிற கட்டணம் என்பது விரைவு பேருந்துகளுக்கு மட்டுமே. அதாவது விரைவு பேருந்துகளில் வசூலிக்கப்பட வேண்டிய கட்டணம் சாதாரண பேருந்துகளில் வசூலிக்கப்படுகிறது.
இதுதவிர, விரைவுப் பேருந்து என்றால் குறைந்தபட்சம் 120 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டும் என்ற விதியும் மீறப்படுகிறது. 25 கிலோ மீட்டர் பயணிக்கும் பேருந்துகளுக்கு கூட விரைவுப் பேருந்து என்று போட்டு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நீதிமன்ற உத்தரவினை மீறி, போக்குவரத்து ஆணையரின் அறிவுரையினை மீறி, கூடுதல் கட்டணங்கள் அரசு போக்குவரத்துக் கழகங்களால் வசூலிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் இதில் உடனடியாக தலையிட்டு, அரசுப் பேருந்துகளில், அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திற்கு மேல் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க எடுக்க வேண்டும்.
The post ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல் அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும் appeared first on Dinakaran.