×

கொரோனா ஊரடங்குதான் என்னை தொழில் முனைவோராக மாற்றியது!

நன்றி குங்குமம் தோழி

தற்போது வளர்ந்து வரும் மருத்துவ சிகிச்சை முறையில், பல வகையான கலை வடிவங்கள்தான் பெரிய அளவில் பங்கு அளித்து வருகிறது. குறிப்பாக ஓவியம் வரைதல், நடனம் பயிலுதல் என்று சொல்லலாம். ஒரு சிலர் ஆர்வத்தினால் இந்தக் கலையினை கற்றுக் கொள்வார்கள். ஆனால் மற்றவர்கள் மருத்துவரின் அறிவுரையினால் இது போன்ற கலைகளை கற்றுக் கொள்ள முன் வருகிறார்கள்.

இந்தக் கலைகளுக்கான பயிற்சி பெரியவர்களுக்கு மட்டுமில்லை, குழந்தைகளுக்கும் இன்றைய சூழலில் சொல்லித் தரப்படுகிறது. அதில் முக்கியமாக ஓவியக் கலை அவர்களின் மனதினை அமைதிப்படுத்த மிகவும் உதவுகிறது. ஓவியக் கலைக்கான பயிற்சியினை பலர் அளித்து வந்தாலும், அதன் மீது கொண்ட ஆர்வத்தினால், போஸ்ட் கார்டுகளில் போட்ரெய்ட் வரைவதை தேர்வு செய்தது மட்டுமில்லாமல், அந்தக் கலையினை மற்றவர்களுக்கும் வர்க்‌ஷாப் மூலமாக சொல்லிக் கொடுத்து வருகிறார் சென்னையின் தொழில்முனைவோர்களில் ஒருவரான பவ்யா சுந்தர்.

இவர் ‘‘இங்க்பீ மெட்ராஸ்’’ (Ink B Madras) என்ற காகிதம் தயாரிக்கும் நிறுவனத்தை துவங்கி அதன் அட்டைப்படங்கள் மற்றும் கவர்களில் தன் கைப்பட ஓவியம் தீட்டி அதனை தயாரிப்பிற்கு அனுப்புகிறார். கடந்த மார்ச் மாதம் சென்னையில் நடைபெற்ற பேனா கண்காட்சியின் போது தங்களது பொருட்களை காட்சிப்படுத்தி, மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். அந்தக் கண்காட்சியில் இவர் தயாரித்த காகிதங்கள் மற்றும் போஸ்ட் அட்டைகள், நாட்குறிப்புகளில் பலவகையான டிசைன்களை வரைந்து வெளியிட்டுள்ளார்.

‘‘நான் சென்னை பொண்ணு. 2018ல் NIFTல்தான் இளங்கலை பட்டப் படிப்பை முடிச்சேன். எனக்கு எப்போதுமே ஸ்டேஷனரி மற்றும் கலை சம்பந்தப்பட்ட பொருட்கள் மேல் ஆர்வம் அதிகம். அதற்கு காரணம் இந்தப் பொருட்கள் எல்லாம் நம்முடைய அன்றாட வாழ்வில் நம்மைச் சுற்றி எப்போதும் இருக்கும். அந்தப் பொருட்களை பார்த்துதான் எனக்கு இதன் மேல் ஆர்வம் அதிகரிக்க ஆரம்பிச்சது. அதனால்தான் டிசைனிங் குறித்த படிப்பை தேர்வு செய்தேன். என்னைப் பொறுத்தவரை, மனம் மற்றும் உடல் சார்ந்த எந்த ஒரு பிரச்னைக்கும் கலை ஒரு தீர்வாக அமையும் என்பது நம்பிக்கை. அதனால்தான் படிப்பிலும் கலை சார்ந்த துறையை தேர்வு செய்தேன்.

நான் ஆடை வடிவமைப்பு துறை சார்ந்து படிச்சிருந்தாலும், எனக்கு கலைத் துறையில் குறிப்பாக ஓவியம் வரைவதில் விருப்பம் அதிகம். படிக்கும் காலத்தில் ஆடை வடிவமைக்க நேரிடும். அந்த சமயத்தில் எனக்கு வரும் சிந்தனைகளை கொண்டு சின்னச் சின்ன போட்ரெய்ட்களை வரைய துவங்கினேன்’’ என்றவர் தான் நிறுவனம் துவங்க காரணம் குறித்தும் பகிர்ந்து கொண்டார்.  ‘‘படிப்பு முடிச்சதும், டிசைனிங் துறையில் பல இடங்களில் வேலை பார்த்திருக்கிறேன்.

அந்த சமயத்தில் எல்லாம் என்னுடைய மனதில் டிசைனிங் துறை சார்ந்து ஒரு நிறுவனம் துவங்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். நாம் ஒரு விஷயத்தை பல நாட்கள் சிந்தித்து வந்தால் கண்டிப்பாக நாம் நினைத்ததை செய்து முடிப்போம். அப்படித்தான் இங்க் பீ உருவானது. இந்த நிறுவனத்தை துவங்கிய போது அதை ஒரு தொழிலாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்படவில்லை. தினமும் கலை சார்ந்த வேலையில் ஈடுபடும் போது, நாம் பயின்ற விஷயத்தை தொடர்ந்து பயிற்சி எடுத்தது போல் இருக்கும் என்றுதான் நான் இதனை துவங்கினேன். நான் வரைந்த படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்வேன்.

அதைப் பார்த்தவர்கள், அதே போல் வரைந்து தரச்சொல்லி கேட்பார்கள். சிலர் அவர்களுக்கு பிடித்த ஒரு விஷயத்தை வரைந்து தரச் சொன்னார்கள். விரும்பி கேட்டவர்களுக்கு செய்து கொடுத்தேன். அதனைத் தொடர்ந்து சில நாளேடுகளில் ஹாண்ட் பெயின்ட் செய்ய ஆரம்பித்தேன். ஆனால் இதனை எல்லாவற்றிலும் செய்ய முடியவில்லை. அது எனக்கு ஒரு சின்ன வருத்தத்தை ஏற்படுத்தியது. அப்போது தான் 2019ல் வேறு நாளேடுகள் அதாவது, இயர்லி ப்ளானரில் (yearly planner) இந்த ஓவியங்களை கொண்டு வந்தால் என்ன என்று திட்டமிட்டு அதனை செயல்படுத்த துவங்கினேன். அதற்கு நான் எதிர்பார்க்காத அளவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பலர் ஆர்டர் செய்து வாங்க ஆரம்பித்தார்கள்’’ என்ற பவ்யா இதற்கான பயிற்சியும் அளித்து வருகிறார்.

‘‘எனக்கு தெரிந்த கலையினை மற்றவர்களுக்கும் சொல்லிக் கொடுக்க விரும்பினேன். தினசரி பயிற்சி இல்லாமல், வர்க்‌ஷாப் மூலம் பயிற்சி அளித்து வந்தேன். இதில் வாட்டர் கலர் மூலம் குறிப்பிட்ட தீம்கள், அனிமீ ஓவியங்களை எவ்வாறு எளிதாகவும் சுவாரஸ்யமாகவும் வரையலாம் என்பதை சொல்லிக் கொடுப்பேன். இதில் வரும் வருமானத்தைக் கொண்டு ‘ஆர்ட் பார் சாரிட்டி’ என்ற அமைப்பினை ஆரம்பித்து அதன் மூலமாகவும் பல வர்க்‌ஷாப்களை நடத்தினேன். கொரோனா ஊரடங்கு மக்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக என்னுடைய கலை வளர கொரோனா காலம் மிகவும் உதவியாக இருந்தது. அதே போல் மற்ற கலைஞர்களுக்கும் உதவி செய்யதான் இந்த வர்க்‌ஷாப்களை நடத்தினேன்’’ என்றவர், தன் நிறுவனத்தில் உருவாகும் பொருட்கள் குறித்து விளக்கினார்.

‘‘என் நிறுவனத்தில் தேதிகளுடன் மற்றும் தேதிகள் இல்லாத வருடாந்திர திட்ட பதிவேடு, போஸ்ட் கர்ட்ஸ், ஏ5, ஏ6 பேப்பர்கள் மற்றும் சில ஸ்டேஷனரி பொருட்கள் என அனைத்தும் தயாரிக்கிறோம். இதில் வரையப்படும் டிசைன்கள் ஒவ்வொரு ஆண்டும் மாறுபடும். அதாவது ஒரு வருடம் குறிப்பிட்ட தீம்களை பின்பற்றுவோம். உதாரணத்திற்கு, ஒரு வருடம் பேபி அனிமீ படங்கள், மோடிவேஷனல் வரிகள் கொண்ட படங்கள் அட்டைப் படங்களாக இருக்கும். அடுத்த வருடம், சுய பாதுகாப்பு குறித்து இருக்கும். இதற்காக நான் யாரையும் நியமிக்கவில்லை.

இதுவரை நான் மட்டுமே இந்த வேலையினை பார்த்து வருகிறேன். விற்பனை துறைக்கு மட்டும் தனிப்பட்ட குழுவினை நியமித்து இருக்கிறேன். அதன் மூலம் சென்னை மட்டுமில்லாமல் வெளி மாவட்டங்களிலும் விற்பனை செய்து வருகிறோம். இணையம் மூலம் வெளிநாடுகளில் இருந்தும் ஆர்டர்கள் வருகிறது’’ என்று பதிலளித்தவர், எதிர்காலத்தில் அதிகமாக டிசைனிங், ஆர்ட் குறித்த வர்க் ஷாப்புகள் நடத்த வேண்டும் என்று உறுதி எடுத்துள்ளதாக தெரிவித்தார்.

தொகுப்பு: காயத்ரி காமராஜ்

 

The post கொரோனா ஊரடங்குதான் என்னை தொழில் முனைவோராக மாற்றியது! appeared first on Dinakaran.

Tags : Kumkum Doshi ,
× RELATED உடைகள் பராமரிப்பு!