×

கோடை வெயிலால் காய்கறி விளைச்சல் குறைந்து வரத்து சரிவு: தக்காளி, பச்சை மிளகாய், பீன்ஸ், அவரை விலை கடும் உயர்வு

திண்டுக்கல்: கோடை வெயிலால் விளைச்சல் குறைந்து வரத்து சரிந்தால் ஒட்டன்சத்திரம் மொத்த விற்பனை காய்கறி சந்தையில் பல்வேறு காய்கறிகளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மொத்த வியாபார காய்கறி சந்தைக்கு சத்திரப்பட்டி, விருப்பாச்சி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து விவசாயிகள் தக்காளி, பச்சை மிளகாய், பீன்ஸ், அவரை, முருங்கை, கொத்தவரை, மாங்காய் போன்றவற்றை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

இச்சந்தையில் இருந்து 60 சதவீத காய்கறிகளை கேரளா மாநில வியாபாரிகளும், 40 சதவீத காய்கறிகளை சென்னை, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். கடந்த வாரம் வரை வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததால் காய்கறிகளின் விளைச்சல் குறைந்து வரத்து சரிந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ரூ.160 வரை விற்ற 14கிலோ கொண்ட தக்காளி பெட்டி ஒன்று தற்போது ரூ.250 வரை விற்பனையாகிறது.

ரூ.50க்கு விற்ற பச்சை மிளகாய் ரூ.75க்கும், ரூ.80க்கு விற்ற பீன்ஸ் ரூ.130க்கும், ரூ.90க்கு விற்ற அவரைக்காய் ரூ.130க்கும் விற்பனையாகிறது. காய்கறிகளின் விலை உயர்ந்து இருப்பதாக மொத்த வியாபாரிகள் தெரிவித்தாலும், விவசாயிகளை பொறுத்தவரை கட்டுப்படியாகும் அளவிலான விலை தங்களுக்கு கிடைக்கவில்லை என வருத்தம் தெரிவிக்கின்றனர். தக்காளி, பச்சை மிளகாய், அவரை, பீன்ஸ் போன்றவற்றின் விலை உயர்ந்தாலும் முருங்கை, மாங்காய், கொத்தவரை போன்ற காய்கறிகளின் விலை கணிசமாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

The post கோடை வெயிலால் காய்கறி விளைச்சல் குறைந்து வரத்து சரிவு: தக்காளி, பச்சை மிளகாய், பீன்ஸ், அவரை விலை கடும் உயர்வு appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Ottenchatram ,Otanchatram ,Chhatrapatti ,Vidhachi ,Dinakaran ,
× RELATED ரூ.4.68 கோடி முறைகேடு விவகாரம்...