×

ஊட்டியில் தொடர் மழையால் மலர் அலங்காரம் பாதிக்குமா?

*அச்சத்தில் தவிக்கும் தோட்டக்கலைத்துறையினர்

ஊட்டி : ஊட்டியில் மழை பெய்து வருவதால் மலர் கண்காட்சி அலங்காரங்கள் பாதிப்பு ஏற்படுமா என கடும் அச்சத்தில் தோட்டக்கலைத்துறையினர் ஆழ்ந்துள்ளனர்.

ஊட்டியை கடந்த மே 1ம் தேதி முதல் சுற்றுலா பயணிகள் முற்றுகையிட துவங்கி விட்டனர். கடந்த சில தினங்களாகவே ஊட்டியில் மேக மூட்டம் மற்றும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. நேற்று காலை முதலே மேக மூட்டம் காணப்பட்டது.

கடந்த 15 நாட்களாக அவ்வப்போது ஊட்டியில் மழை பெய்து வருகிறது. இதனால் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு தற்போது ஊட்டியில் மிதமான காலநிலை நிலவி வருகிறது. சமவெளி பகுதிகளில் சுட்டெரிக்கும் வெயிலை மட்டும் கண்டு ‘சூடாகி’ போன மக்கள் விடுமுறையை கொண்டாட ஊட்டி வந்த நிலையில் குளு குளு காலநிலையை கண்டு உற்சாகமடைந்துள்ளனர். மலர் கண்காட்சி துவங்கி நான்கு நாட்களே ஆன நிலையில், மேலும், 6 நாட்கள் மலர் கண்காட்சி நடக்கவுள்ளது. பெர்ன் பூங்காவில் டிஸ்னி வேர்ல்டு, மலை ரயில் ஆகிய மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன.

தாவரவியல் பூங்காவில் உள்ள புதுப்பூங்கா, மாடங்கள் மற்றும் சிறிய புல் மைதானங்களில் தொட்டிகளை கொண்டு மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. தற்போது ஊட்டியில் மழை பெய்து வரும் நிலையில், பிளாஸ்டிக் போர்வை கொண்டு இந்த மலர் செடிகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. நேற்றும் மழை பெய்தது. மாடங்களில் வைக்கப்பட்டுள்ள மலர் செடிகள் பாதிக்க வாய்ப்பில்லை.

அதே சமயம் தொடர்ந்து மழை பெய்தால், கண்காட்சிக்கான அலங்கார பணிகள் பாதிக்க வாய்ப்புள்ளது. அதுமட்டுமின்றி மலர்கள் உதிரவும் வாய்ப்புள்ளது. இதனால், கண்காட்சி பொலிவிழக்க வாய்ப்புள்ளது. மழையால், மலர் கண்காட்சி அலங்கார பணிகள் பாதிக்கும் அச்சத்தில் தோட்டக்கலைத்துறையினர் உள்ளனர். அதே சமயம் ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மழை பெய்து வருவதால் விவசாயிகள், பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

விவசாயிகள் மகிழ்ச்சி: ஊட்டி மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று கனமழை பெய்த நிலையில் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆண்டு தோறும் ஜூன் மாதம் துவங்கி நவம்பர் மாதம் வரை நீலகிரியில் மழை பெய்யும். இது போன்ற சமயங்களில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் அதிகளவு தேங்கி நிற்கும்.

அனைத்து நீரோடைகள், குளங்கள் மற்றும் குட்டைகளில் தண்ணீர் தேங்கி நிற்கும். தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கும் சமயங்களில விவசாயம் மேற்க்கொள்ள முடியாது. அதே சமயம் சமமான, மலைப் பாங்கான பகுதிகளில் விவசாயிகள் மேற்க்கொள்வது வழக்கம். ஆனால், கடந்த ஆண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவிற்கு பெய்யவில்லை. இதனால், விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

தொடர்ந்து, டிசம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை பனியின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இரு மாதங்கள் வெயிலின் தாக்கமும் அதிகமாக காணப்பட்டது. இதனால், தேயிலை விவசாயிகள் மற்றும் மலை காய்கறி விவசாயமும் பாதித்தது. இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக நீலகிரி நீலகிரியில் மழை பெய்து வருகிறது.

குறிப்பாக, ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நாள் தோறும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. நேற்றும் பகலில் சில மணி நேரம் மழை கொட்டியது. இதனால், சில நீர் ஆதாரங்களில் தண்ணீர் அளவு உயரத்துவங்கியுள்ளன. தொடர் மழையால் தற்போது நீர் நிலைகள் மற்றும் நீரோடைகளில் தண்ணீர் அளவு சற்று உயர்ந்து வருகிறது. இதனால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து ஒரு சில தினங்கள் இதே போன்ற கன மழை பெய்தால் பெய்தால், தண்ணீர் பிரச்னை இருக்காது என பொதுமக்கள் தெரிவித்தனர்.

The post ஊட்டியில் தொடர் மழையால் மலர் அலங்காரம் பாதிக்குமா? appeared first on Dinakaran.

Tags : Ooty ,
× RELATED குன்னூர், ஊட்டியில் குவிந்த சுற்றுலா...