×

கடன் பிரச்னை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை: உருக்கமான கடிதம் சிக்கியது சென்னை மாதவரம் அருகே பரிதாபம்

சோழிங்கநல்லூர், மே 14: மாதவரம் அருகே கடன் பிரச்னையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மாதவரம் பால்பண்ணை அருகே பெரிய சேக்காடு, கிருஷ்ணப்பன் தெருவை சேர்ந்தவர் ஜெகநாதன் (40). இவர், மணலி மார்க்கெட்டில் நாட்டு மருந்து, சிறுதானியங்கள் விற்கும் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி லோகேஸ்வரி (35), மகள் காவியா (13). வாடகை வீட்டில் வசித்து வரும் ஜெகநாதன், வங்கியில் கடன் வாங்கி சொந்தமாக வீடு ஒன்று வாங்கி உள்ளார்.

இந்நிலையில், அந்த கடனை அடைக்க முடியாமல், பலரிடம் கடன் வாங்கி உள்ளார். மேலும், வியாபாரத்தில் போதிய வருமானம் இல்லாததால் கடனை முழுமையாக அடக்க முடியாமலும், மகளின் படிப்பு மற்றும் குடும்ப செலவுகளை பராமரிக்க முடியாமல் சிரமப்பட்டார். இதுகுறித்து அவர் தனது தாய் சாந்தி மற்றும் சகோதரனிடம் கூறி வருத்தப்பட்டுள்ளார். இதனிடையே, கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு தொல்லை செய்ததால், மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். கடந்த வாரம் சொந்த ஊருக்கு சென்று கணவன், மனைவி இருவரும் குல தெய்வத்திற்கு மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளனர். பின்னர், 4 நாட்களுக்கு முன்பு ஊரிலிருந்து திரும்பி வந்துள்ளனர். அதன்பிறகு, ஜெகநாதன் கடையை திறக்காமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.

இந்நிலையில், நேற்று காலை வெகு நேரமாகியும் ஜெகநாதன் வீட்டிலிருந்து யாரும் வெளியே வரவில்லை. இதனால், சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், அங்கு சென்று பார்த்தபோது, கதவு உள்பக்கமாக தாழிட்டு இருந்தது. நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்கவில்லை. இதனால், வீட்டு ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்துள்ளனர். அப்போது, உள்ளே ஜெகநாதன், அவரது மனைவி இருவரும் மின் விசிறியில் தூக்கில் தொங்கியது தெரிந்தது. படுக்கையறையில் அவர்களது மகள் காவியாவும் இறந்து கிடந்தார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், மாதவரம் பால்பண்ணை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார், அவர்களது வீட்டில் நடத்திய சோதனையில், ஒரு கடிதம் சிக்கியது. அதில், ஜெகநாதன் தனக்கு கடன் சுமை அதிகமாகி விட்டதாகவும், அதை திருப்பி கொடுக்க முடியவில்லை எனவும், தனக்கு இனிமேல் கடன் கொடுக்கவும் யாரும் இல்லை. இதனால், நாங்கள் தற்கொலை செய்து கொள்கிறோம். எனக்கு கடன் கொடுத்தவர்களும், வீட்டு உரிமையாளரும் என்னை மன்னித்து விடவும். எங்கள் 3 பேரின் உடலையும் அனாதை பிணமாக எண்ணி காவல் துறையினர் அடக்கம் செய்து விடவும், என கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post கடன் பிரச்னை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை: உருக்கமான கடிதம் சிக்கியது சென்னை மாதவரம் அருகே பரிதாபம் appeared first on Dinakaran.

Tags : Madhavaram, Chennai ,Chozhinganallur ,Madhavaram ,Periya Sekadu, Krishnappan Street ,Chennai ,
× RELATED கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்ற 8 பேர் கைது