×

கிளினிக் நடத்திய போலி டாக்டர் கைது பேரணாம்பட்டு அருகே பரபரப்பு டிப்ளமோ நர்சிங் படித்துவிட்டு

பேரணாம்பட்டு, மே 14: பேரணாம்பட்டு அருகே டிப்ளமோ நர்சிங் படித்துவிட்டு, கிளினிக் நடத்தி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த போலி டாக்டரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த கீழ்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை(51). இவர் எம்பிபிஎஸ் படிக்காமல் வீட்டின் அருகே கிளினிக் வைத்து மருத்துவம் பார்த்து வருவதாக வேலூர் மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் பாலச்சந்திரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் நேற்று குடியாத்தம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் மாறன்பாபு தலைமையில், மருந்தாளுனர் லலித்குமார் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் கீழ்பட்டியில் ஏழுமலை நடத்தி வந்த கிளினிக்கிற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஏழுமலை டிப்ளமோ நர்சிங் படித்து விட்டு, 2 ஆண்டுகளாக தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்ததும், பின்னர் கீழ்பட்டியில் வீட்டின் அருகிலேயே கிளினிக் ஆரம்பித்து நோயாளிகளுக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்து வந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து மருந்து, மாத்திரைகளை பறிமுதல் செய்த மருத்துவ அதிகாரிகள், கிளினிக்குக்கு சீல் வைத்தனர். மேலும் மேல்பட்டி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், எஸ்ஐ குப்பன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி டாக்டர் ஏழுமலையை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post கிளினிக் நடத்திய போலி டாக்டர் கைது பேரணாம்பட்டு அருகே பரபரப்பு டிப்ளமோ நர்சிங் படித்துவிட்டு appeared first on Dinakaran.

Tags : Peranampattu ,Peranampatu ,Yehumalai ,Kilpatti village ,Vellore district.… ,
× RELATED பைக், டிராக்டர் நேருக்கு நேர் மோதி...